விதி பெரியதா? மதி பெரியதா?
இந்து மதத்தை நன்றாக புரிந்து கொண்டோம் என்று நினைப்பவர்கள் கூட இதற்கு சரியாக பதில் கூற இயலாமல் சிரமப்படுகிறார்கள்.
பாகம்: 1 வினைப்படியே வாழ்க்கை நடக்குமானால் முயற்சி ஏன்?
இந்த கேள்விக்கு சரியாக விடை தெரியாமல் குழம்புவர்களுக்கு ...... இதோ விடை.
ஒவ்வொரு ஜீவனின் உள்ளத்தில் கர்ம, வாஸனை, என்று இரண்டு ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றன.
இதற்கு முன்னெடுத்த மனுஷ்ய ஜன்மத்தில் எவ்வளவோ நல்வினை தீவினைகளைச் செய்திருக்கக்கூடுமன்றோ? அவை செய்யும்போதே பதிவு ரூபமாய் உள்ளத்தினில் பதிந்து அடங்கியிருக்கின்றன. அங்ஙனம் அடங்கியிருந்து மறுஜன்மங்களில் தத்தம் பயனாகிய இன்ப துன்பங்களைத் தருகின்றன. அங்ஙனம் இன்ப துன்பங்களை மாத்திரம் தருவனவே கர்மங்கள் எனப்படுகின்றன.
அவ்வின்ப துன்பங்கள் எக்காலத்தில் எவை எவை வருவனவோ அவையவை அக்காலத்தில் தன் செயல் மூலமாகவோ அல்லது பிறன் செயல் மூலமாகவோ அல்லது தைவீகமாகவோ ஜீவர்களால் அனுபவிக்கும் படியாகும். ஆனால், ஜீவர்களின் செய்கைக்குக் காரணம் கர்மாவாகாது. அது, வாஸனை. வாஸனையாவது, யாதானும் ஓர் காரியத்தைப் பலமுறை செய்தால் மீண்டும் அப்படிப்பட்ட காரியத்தையே செய்துகொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றச்செய்வதாகிய அப்யாஸ ஸம்ஸ்காரமேயாம். இந்த வாஸனையே ஜீவர்களை எதனையானும் ஸங்கற்பித்துக்கொண்டே இருக்கச் செய்கின்றது.
ஸங்கற்பத்தால் காமமும் (விருப்பமும்) காமத்தால் செய்கையும் நிகழுகின்றது. வாஸனையானது இங்ஙனம் நேரில் ஸங்கர்பத்திற்கும் பரம்பரையாய் செய்கைக்கும் ஹேதுவாகின்றது. வாஸனாவசமாக நல்வினை தீவினைகளில் செல்லும்போது காகதளீய * நியாயமாகவே பூர்வகர்மா பயன்பட்டு ப்ராரப்தமாக வந்து இன்ப துன்பத்தைத் தருகின்றது. இப்போது செய்யும் கர்மாவினால் அவ்வின்ப துன்பம் வருகின்றதென்பதில்லை. கர்மா வேறு வாஸனை வேறு. வாஸனையால் ஏற்படுவது ஸங்கற்பம் காமம் முதலியவை. கர்மாவினால் வருவது இன்பதுன்பம். இவ்விதம் விவேகித்து அறிந்து கொண்டால் சாஸ்திர வாக்கியங்களில் விரோதம் சிறிதுமில்லை என்பது நன்றாய் விளங்கும
சங்கை
கர்மாவுக்கு அந்நியமாய் வாஸனை எனும் ஒன்றை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்? கர்மாவே இன்ப துன்பங்களைத் தருவது போல அவ்வின்ப துன்பத்திற்கு ஏதுவாய்க் காணப்படும் செய்கைகளிலும் ஏவி விடுகின்றது என்பது கூடாதோ?
இது உசிதமல்ல. நல்வினை தீவினைகளில் ஏவிக்கொண்டே கர்மாவே இன்ப துன்பங்களையும் தருகின்றதெனின், புண்ய கர்மாவினாலேயே இன்பமும் பாவத்தினாலேயே துன்பமும் வருகின்றது என்பது போல புண்ய கர்மாவினால் புண்ணிய கார்யங்களிலேயே ஸங்கற்ப காமாதிகள் உண்டாக வேண்டும் என்றும் அவ்வாறே பாப கர்மத்தினால் கெட்ட கார்யங்களிலேயே ப்ரவ்ருத்தி ஏற்பட வேண்டும் என்றும் கொள்ள வேண்டியதாகிறது. அப்படியானால், சுகம் அனுபவிக்கின்றவர்கள் எல்லோரும் நல்ல கார்யத்திலேயே சென்று கொண்டிருக்க வேண்டும் என்றும், துன்பம் அனுபவிக்கின்றவர்கள் கெட்ட கார்யத்திலேயே சென்று கொண்டிருக்க வேண்டும் என்றும் கொள்ள வேண்டியதாகின்றது. ஆனால் உலகில் இந்த நியமம் காணப்படவில்லை. நல்ல கார்யங்களையே செய்து கொண்டு துன்பத்தையே அனுபவிக்கின்றதையும், கெட்ட கார்யங்களையே செய்து கொண்டு இன்பத்தையே அனுபவிக்கின்றதையும் காண்கின்றோம் அன்றோ? ஆதலால், ஸங்கற்பம் முதலிய செய்கைகளைச் செய்விப்பது ஒன்றும் இன்ப துன்பங்களைத் தருவது மற்றொன்றுமாக இருக்க வேண்டும் என்ற நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனது பற்றியே, கர்மாவிலும் வாஸனை வேறு என்று கொள்ள வேண்டியது ஆகின்றது.
சங்கை
கர்மா, வாஸனை என வேற்றுமைப் படுத்திப் பிரித்துச் சொல்லப் பட்ட இவ்விரண்டும் எதனால் வந்தது என்பதைக் கவனித்தால், இதற்கு முன் எடுத்த ஜன்மங்களில் செய்த செய்கையினாலேயே என்பது விளங்குகிறது. இங்ஙனம், இரண்டிற்கும் காரணம் ஒன்றாகவே இருக்கின்றமையால் இவ்விரண்டு கார்யங்களையும் (கர்ம வாஸனைகள் இரண்டையும்) ஒன்றே எனக்கொள்ளலாமே? உசிதம் இவ்வாறு இருக்க, கர்மா வேறு, வாஸனை வேறு என இரண்டையும், தனித்தனிப் பொருளாய்ச் சொல்லுவது ஏன்?
இச்சங்கை அவிவேகத்தாலேயே நிகழுவதாம். அதெப்படி என்றால், பூர்வ ஜன்மத்திய செய்கைகளே கர்ம, வாஸனை இரண்டிற்கும் ஹேதுவாயிருக்கினும் அச்செய்கைகளால் வருவது இரண்டு விதமாய்ப் பிரிவடைகின்றமையால், அவைகளை நாம் இரண்டாகவே விவேகித்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, சுருட்டு குடித்தல் புகையிலை போடுதல் முதலிய செய்கைகளால் கபால வறட்சி (cancer) முதலிய வியாதியொன்றும், மீண்டும் அவைகளை உபயோகிக்க வேண்டும் எனும் அப்யாஸப் பற்று மற்றொன்றுமாக இரண்டு விதமான விசேஷம் ஏற்படுவதுபோல, நல்வினை தீவினைகளைச் செய்தலால் ஏற்படும் விசேஷமும் இரண்டு விதமாய் பிறிகின்றது. அதாவது, ஜன்மாந்தரத்தில் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களுக்கு மாத்திரம் ஹேதுவாகும் கர்மா ஒன்றும், மீண்டும் அதே கார்யங்களில் தூண்டிவிடுவதாகிய அப்யாஸ ஸம்ஸ்காரம் மற்றொன்றுமாம்.
ஒரு கார்யத்தை ஓர் தடவை செய்தாலும் அது ஓர் கர்மாவாய்விடும். ஓரே காரியத்தை பல முறை செய்தால் ஒழிய வாஸனை ஏற்படாது. கர்மாவினால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். வாஸனையால் வரும் ஸங்கற்பத்தை விவேகத்தால் வென்று விடலாம். கர்மா மிகவும் பலமுடையது. வாஸனை அற்பமே. இங்ஙனம், இவ்விரண்டிற்கும் மிகவும் வித்தியாஸமிருக்கின்றது. ஆதலால் இவ்விரண்டையும் ஒன்றாகக் கொள்ள இயலவில்லை. எனவே, கர்மா வேறு வாஸனை வேறு என்று சொல்லப்பட்டது.
சங்கை
வாஸனையே, ஸங்கற்பம் முதலியவைகளின் மூலமாக, செய்கைக்கு ஏதுவாகின்றது என்று சொல்லப்பட்டதே. அதெப்படி?
உதாரணமாக அழகிய மங்கை, ஆபரணம், விலை உயர்ந்த வஸ்திரம், ருசியாகிய கனி முதலிய பொருள்கள் தற்செயலாய் எதிர்ப்படும் போது, எதிரில் உள்ளதை எல்லாம் பார்க்கும் இயல்பினால், நேத்திரம் அவைகளை நோக்கவே, அசுப வாஸனையே விசேஷமாய் உள்ளவன் ஆனால், இவை எவ்வளவு அழகாய் இருக்கின்றன என அவைகளின் சிறப்பை ஸங்கற்பிப்பான். அந்த ஸங்கற்பத்திற்குச் சற்று நேரம் இடம் கொடுத்து விட்டானாயின், அவைகளை தான் அனுபவிக்க வேண்டும் என விருப்பம் உதிக்கும். அவ்விருப்பம் மேற்படின் பிறகு அவைகளை அனுபவித்தே தீருவது என்னும் நிச்சயம் உடையோனாய் அக்கார்யத்தில் பிரவர்த்திப்பான். இவ்வுண்மையானது,
विशयेश्वाविशेच्चेत स्सम्कल्पयति तद्गुणानु।
सम्यक्सम्कल्पनात्कामः कामात्पुम्शःप्रवर्ततम्॥
விஷயங்களில் சித்தஞ்சென்றால், அவைகளின் குணங்களை ஸங்கற்பிக்கின்றது. நன்றாய் ஸங்கற்பித்தால் விருப்பம் உதிக்கும். காமம் ஏற்படின் மனிதன் பிரவர்த்திக்கின்றான்.
என சங்கர பகவத்பாதர் முதலிய பெரியோர்களால் உபதேசிக்கப்பட்டிருக்கின்றது.
விவேகிக்கு அசுப வாஸனை சற்று குன்றியிருக்கும் ஆகையால் அவ்விஷயங்கள் எதிர்படும் போதே கண் பார்த்தாலும் பிறகு அவன் அவைகளின் குணங்களை ஸங்கற்பிக்க விடாமல் மனஸை நிக்ரஹித்து மற்றோர் நல்ல விஷயத்தில் செலுத்துவான். அங்ஙனமாயின், அவ்வசுப வாஸனை யாதும் செய்வதற்கு இன்றி அடங்கிப் போகின்றது. வாஸனையால் செய்கை நிகழுவதும் அதனை நிக்ரஹித்தலும் இவ்வாறே.
வாஸனையானது சுபம் அசுபம் என்று இரு வகையாகும். பூர்வம் பாவங்களையே அடுத்தடுத்து செய்திருந்தால் அசுப வாஸனையும், புண்ணியங்களையே விசேஷமாய் செய்திருந்தால் சுபவாஸனையும், பூர்வம் பாவங்களையே விசேஷமாய் செய்திருந்தால் சுபவாஸனையும் ஏற்பட்டு சித்தத்தில் பதிந்து கிடக்கும். பூர்வம் சுபவாஸனையே விசேஷமாய் ஏற்பட்டிருக்கினும் இப்போது அஸத் ஸஹவாஸம் முதலியவைகளைச் செய்தால் அது குன்றி அசுப வாஸனையே பலத்து விடும். அல்லது பூர்வம் அசுப வாஸனையே விசேஷமாய் ஏற்பட்டிருக்கின், இப்போது செய்யும் ஸத்ஸஹவாஸம் முதலியவைகளால் அது குன்றி, சுபவாஸனை பலத்து விடும். ஆதலால், அசுப வாஸனையை தடுத்து சுபவாஸனையின் வழியே நடக்க வேண்டும்.
இங்ஙனம்....
वासनाच्चिधाप्रोक्ताशुद्धाचमलिनाचसा।
वासनौघेनशुद्धेन तत्र चेद्नुनीयसे तत्क्रमेनाशुतेनैवपद्मप्राप्यसि शाश्वतम्।
अथचेद्शुभौ भाव स्त्वाम्योजयति संकटे।
प्राक्तन्स्तद्सौयत्राज्जेतव्यौ भवतास्वयं॥
"வாஸனை சுத்தம் மலினம் என்று இருவகையாம். சுத்த வாஸனைத் தொகுதிகள் நல் வழியில் ஏவும். அங்ஙனம் ஏவும் போது அவ்வழி நடப்பாயாயின், கிரமமாக அழிவில்லாத பதத்தை அடையலாம். அசுப வாஸனையானது கெட்ட காரியத்தில் ஏவும். அப்படி ஏவும் போது அந்த பூர்வ வாஸனையை பலமான முயற்சி கொண்டு உன்னால் வென்று போடத் தக்கது. "
என்பது முதலிய சுலோகங்களால் யோக வாஸிஷ்டம் முதலிய நூல்களில் உபதேசிக்கப் பட்டிருக்கின்றது.
சுப வாஸனையின்படி நடந்தாலும், அல்லது அசுப வாஸனையின்படி நடந்தாலும் இப்போது வரும் இன்ப துன்பம் வந்தே தீரும். அது மாறுவதில்லை. ஏனெனின் இந்த சரீரம் கர்ப்பத்தில் உற்பத்தியாகும் போதே $இச்சரீரத்தினால் இந்த இந்த ஸமயத்தில் இந்த இந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டும்$ என இவனது பூர்வ கர்மங்களுக்கு தக்கபடி ஈசனால் ஆஜ்ஞை செய்யப்பட்டு விட்டது. அதை மீறி நடக்க எவராலும் இயலாது.
ஈசாக்ஞை மிக்க பலமுடையது. ஆதலால், அற்ப யோக்கியதை உடைய பசுக்களாகிய இச்சீவர்களால் அதன்படி எப்போது எவ்விதமான இன்ப துன்பம் வருமோ அப்போது அதற்குட்பட்டே நடக்க வேண்டும். இவ்வாறு, நல்லதை செய்தாலும் கெடுதியைச் செய்யினும் இப்போது வரும் பயன் ஒன்றே எனின் எதைச் செய்வது நலம் என்று யோசிக்க வேண்டும். ஒன்றும் செய்யாமல் ஒருவனும் ஓர் க்ஷணமும் இருக்க இயலாது. குரங்குக்குப் போல எப்போதும் யாதானும் ஓர் சேஷ்டை இருந்து கொண்டேயிருக்கும்.
नहि कश्चित् क्षणमपि जातु तिश्मत्यकर्मकृत्।
कर्यतेह्यवशः कर्म सर्वः प्रकृति जैर्गुणैः॥
"ஒருவனும் ஓர் க்ஷணமும் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க மாட்டான். எல்லோரும் பிரகிருதியால் வரும் குணங்களால் அவசமாக எதனையேனும் செய்து கொண்டேயிருக்கின்றனர்"
என பகவானால் அர்ஜுன்னுக்கு உபதேசிக்கப்பட்டிருக்கின்றது.
இங்ஙனம் இருத்தலால், மனிதர் எதனை செய்வது நலம் என யோஜிப்போமானால், சுப வாஸனையின் வழி நடக்க வேண்டும் என்று அறியப்படுகின்றது. அசுப வாஸனையின் வழி நடந்து தீமையைச் செய்தால் இச்செய்கையே பாவமாய் முடிந்து மறுமையில் துன்பத்திற்கே ஏதுவாகும். சுபவாஸனையின்படி நடப்பதோ என்றால், அதுவே புண்ணியமாய் வந்து மருமையில் இன்பத்தையே தரும். ஆதலால், மனிதர் அசுபவாஸனையின்படி நடக்கக் கூடாது என்பதே விவேகம்.
சுபவாஸனையின்படியே நடக்கும் போது ஓரோர் சமயம் ஏற்கனவே சித்தத்தில் பதிந்துள்ள அசுப வாஸனைகள் பல ஓருங்கு சேர்ந்து கெட்ட காரியங்களில் மிக்கப் பலமாக ஏவுவதும் உண்டு. தீரர் அதற்கு சிறிதும் சலியாமல், திட விவேகத்தால் அவைகளைத் தகைந்து வென்று போடுவார். சொற்ப காலம் சுருட்டு, கள், கஞ்சா முதலியவைகளை அப்பியஸித்தவன் பின்னர் அவைகளை துரப்பியாஸம் எனக்கண்டு அவைகளை நிறுத்தி யிருக்கினும் ஓரோர் சமயம் முன்போலவே அவைகளில் சபலம் உண்டாகின்றது. அது, பூர்வம் செய்த அப்பியாஸத்தினால் ஏற்பட்டுள்ள வாஸனையினாலேயே அன்றோ?
அற்ப கால அப்பியாஸத்திற்கே இவ்வளவு பலமாக வாஸனை ஏற்படும் எனின், அனந்த கோடி ஜந்மங்களில் அழகிய மங்கையை விரும்புதலும், ஆடையாபரணங்களில் மயங்குவதும் ருசியாகிய பதார்த்தங்களை உண்பதும் இவை போன்ற காரியங்கள் அப்பியாஸத்தில் ஏற்பட்டிருக்கம் ஆதலின் அதற்குத் தக்கபடி வாஸனை மனஸினில் எவ்வளவு திடமாய் ஊன்றி இருக்கக் கூடும்?
விளக்கத்துடன் பதில்கள் மேலும் தொடரும்....
3 comments:
அற்புதமான விளக்கங்கள். சஞ்சித கர்மம் - ப்ராரப்த கர்மம் என்பார்களே, அதில் சஞ்சித கர்மத்தைத்தான் கர்ம வாசனை என்று சொல்கிறீர்களா?
எல்லா கர்மங்களும் சேர்ந்த தொகுப்பைத்தான் இங்கு குறிப்பது.
திரு. ஜெயராமன். மிக நல்ல விளக்கம்.
Post a Comment