ஸத்காரியத்திலும் துக்கம் ஏன்? கெட்ட நடத்தையிலும் சுகமடைவது ஏன்?
புஸ்தகம்: "விதி பெரியதா? மதி பெரியதா?"
பாகம் 1 வினைப்படியே வாழ்க்கை நடக்குமானால் முயற்சி ஏன்? ஐ இங்கே முதலில் பார்த்தோம்.
இப்போது:
பாகம்: 2 ஸத்காரியத்திலும் துக்கம் ஏன்? கெட்ட நடத்தையிலும் சுகமடைவது ஏன்
சுபவாஸனையின்படியே நடக்கும் போது, ஓரோர்ஸமயம் ஏற்கனவே சித்தத்தில் பதிந்துள்ள அசுபவாஸனைகள் பல ஒருங்கு சேர்ந்து கெட்ட காரியங்களில் மிக்க பலமாக ஏவுவதும் உண்டு. தீரர் அதற்கு சிறிதும் சலியாமல் திட விவேகத்தால் அவைகளை தகைத்து வென்று போடுவார். சொற்பகாலம் சுருட்டு, கள், கஞ்சா முதலியவைகளை அப்பியஸித்தவன் பின்னர் அவைகளை துரப்பியாஸமெனக் கண்டு இனி இவ்வப்பியாஸம் கூடாதென்று உறுதிகொண்டு அவைகளை நிறுத்தியிருக்கினும் ஓரோர் ஸமயம் முன்போலவே அவைகளில் சபலம் உண்டாகின்றது. அது பூர்வம் செய்த அப்பியாஸத்தினால் எற்பட்டுள்ள வாஸனையினாலேயே அன்றோ?அற்பகால அப்பியாஸத்திற்கே இவ்வளவு பலமாக வாஸனையேற்படும் எனின், அனந்த கோடி ஜந்மங்களில் அழகிய மங்கையை விரும்புதலும், ஆடையாபரணங்களில் மயங்குவதும், ருசியாகிய பதார்த்தங்களை உண்பதும் இவை போன்ற காரியங்கள் அப்பியாஸத்தில் எற்பட்டிருக்கும் ஆதலின் அதற்குத் தக்கபடி வாஸனை மனஸனில் எவ்வளவு திடமாய் ஊன்றி இருக்க்க் கூடும்?அப்படிப்பட்ட வாஸனைகள் அசுப காரியங்களில் ஏவும்போது மனிதருக்கு அவைகளை நிக்ரஹிப்பது அஸாத்தியம் என்றே தோன்றும். ஆனால், அது தவறேயாம். அதற்குத் தக்கபடி மிகவும் திடமாகிய முயற்சியால் அவைகளை வென்று போடலாம் என்பது நிச்சயம்.
இது வரையிலும் வாஸனையைப் பற்றி விஸ்தரிக்கப்பட்டது.
கர்மாவாவது: இதற்கு முன் எடுத்திருந்த அளவற்ற ஜன்மங்களில் மனுஷ்ய ஜன்மங்களும் எவ்வளவோ ஏற்பட்டிருக்க கூடுமன்றோ? மனுஷ்ய ஜன்மங்களில் செய்யப்பட்ட நல்ல காரியங்களும் கெட்ட காரியங்களும் அப்போதைக்கப்போது மனஸினில் மிக்க நுட்பமாய் பதிந்து போகின்றன. அவை ஸ்வர்க்கத்திலாவது நரகத்திலாவது, மனுஷ்யப் பிறவியிலாவது, காலாந்தரத்தில் தத்தம் பயனான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன. அவ்விதம் இன்பதுன்பங்களைத் தரும் மனஸினிலுள்ள பதிவே கர்மா என்பதாம்.
சங்கை: மனுஷ்ய ஜன்மத்தில் செய்யப்படும் செய்கைகளும் கர்மாக்களாகின்றன என்பது கூடாதோ?
கூடாதென்க. ஏனெனின், செய்கை மாத்திரத்தினாலேயே கர்மா ஏற்படும் என்பதல்ல. மற்று யாதெனின் இது புண்ணியம், இது பாபம் எனப் புண்ணிய பாபங்களில் பகுத்தறிவுள்ளவர் செய்யும் செய்கைகளே கர்மாக்களாகும் என்பதே சாஸ்திரங்களின் மர்மம்.இவ்விதம் புண்ணிய பாபங்களின் பகுத்தறிவோடு கர்த்திருத்துவாதி பாவனைகளுடன் செய்யப்பட்டுள்ள நல்ல காரியங்களும் கெட்ட காரியங்களும் செய்யப்படும்போதே அறிவினில் பதிவு ரூபமாகுந் தன்மையைப் பெற்றுக் காலாந்தரத்தில் கர்மாக்களாய் வந்து இன்ப துன்பங்களுக்கு ஏதுவாகின்றன.
இக்கருமங்கள் பிராரப்தம், ஸஞ்சிதம், ஆகாமி என முவ்வகைப்படும். அதெப்படி எனின், இதற்கு முன் எடுத்திருந்த மனுஷ்ய ஜன்மத்தில் லக்ஷம் கர்மா செய்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அவைகளில் ஓர் கொடும் பாபகர்மம் பக்குவப்பட்டுப் பலகோடி நரகயாதனையை அளித்தது. அதன் பிறகு மற்றோர் கர்மா பரிபக்குவப்பட்டு கிருமி கீடாதி பலஜன்மங்களைத் தந்தது. அதன் பிறகு மற்றோர் கர்மா பக்குவப்பட்டு பசுவாதி ஜன்மாவைத் தந்தது. இங்ஙனம் மூன்று கர்மங்களின் பயனை அனுபவிக்கவே நான்காவது ஓர் பெரிய புண்ணிய கர்மா பக்குவப்பட்டு வந்து அரியதாகிய இம்மனிதப் பிறவியைத் தந்தது.
இங்ஙனம் மனிதப்பிறவியை மாத்திரம் தந்து அதனோடு அக்கருமம் முடிந்து போகவில்லை.இந்த தேஹம் எவ்வளவு சுவாஸம் விடவேண்டியது என ஈசாக்ஞையின் படி நியதாமாய் உள்ள சுவாஸத்தையும் தந்து, இத்தேஹம் தோன்றியது முதல் மரிக்கும் வரையிலுள்ள காலத்தில் எந்தெந்தஸமயத்தில் எந்தெந்த இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென நியதமாகிய இன்ப துன்ப போகத்திற்கும் ஏதுவாகின்றது.
இங்ஙனம் இதற்குப் பூர்வம் மனுஷ்ய ஜன்மத்தில் ஸம்பாதிக்கப் பட்ட லக்ஷங்கர்மாக்களில் ஏற்கனவே அனுபவத்தினால் மூன்று கர்மங்கள் ஒழியவே நான்காவதாகிய கர்மாவினால் இம்மனுஷ்ய ஜன்மாவைப் பெற்று இன்ப துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறோம் அன்றோ. இந்த கர்மமே ப்ராரப்தம் என்பதாம். ப்ர, ஆரப்தம் எனின் பயன் தரத்தலைப்பட்டுள்ளது எனப் பொருள். இந்நான்கு கர்மங்களுக்கு அந்நியமாய் இனி மறுபிறவிகளில் பயன் தருவனவாயுள்ள 99,996 கர்மங்களும் ஸஞ்சிதங்கள் எனப்படும். இம்மனித ஜன்மத்தைப் பெற்று இப்போது புதிதாய்ச் செய்கிறோம் அன்றோ. அங்ஙனம் செய்யப்படும் கர்மங்களே ஆகாமி கர்மங்கள் என்பனவாம்.
ஸஞ்சிதங்களையும், ஆகாமிகளையும் ஞானத்தினாலும், பிராயச்சித்தத்தினாலும் ஒழித்துப் போடலாம். ஆயினும், இந்த மனுஷ்ய தேகத்தைத் தந்து இதனால் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களையும் தரத் தலைப்பட்டுள்ளதாகிய ப்ராரப்த கர்மம் மாத்திரம் ஞானத்திலாவது மற்றெதனாலாவது துலையாது. இதனை அனுபவித்தே ஒழிக்க வேண்டும்.
இவன் இப்போதிய செய்கைகளை நல்லவைகளாகவே செய்தாலும் அல்லது தீயவைகளாகவே செய்தாலும் அல்லது ஹடங் கொண்டு வீம்பு பிடித்துச் சும்மா இருந்தாலும் ப்ராரப்தகர்மத்தின்படி எவ்வின்ப துன்பம் வர வேண்டுமோ அது வந்தே தீரும். அப்படி வரும் இன்ப துன்பங்கள் இப்போதிய செயல்களின் பயனென மூடர்களுக்குத் தோன்றும். இப்போதிய செய்கைகளுக்குப் பயன் மறு பிறவிகளில்தான் வரும். இப்போதிய இன்ப துன்பங்களெல்லாம் பூர்வ கர்மப் பயனே என்பது நிர்ணயம்.
இவ்வுண்மையே
एवं हठाच्च दैवाच्च स्वभावात्कर्मणस्तथा।
यानि प्राप्नोति पुरुषस्तत्फलम् पूर्वकर्मणा॥
“இங்ஙனம் ஹடத்தினாலும் தைவத்தினாலும் ஸ்வபாவத்தினாலும் செய்கையினாலும் எந்த இன்ப துன்பங்களை அடைகின்றானோ அவை பூர்வ கர்மங்களின் பயனே”
என மஹாபாரதம் ஆரண்ய பர்வாவில் சொல்லப்பட்டுள்ளது.
ப்ராரப்த கர்மத்தின்படி ஸுகமாவது துக்கமாவது வரத்தயாராய் இருக்கும்போது மனிதன் வாஸனா வசமாய் யாதானும் ஓர் காரியத்தைச் செய்யக்கூடும். அப்படிச் செய்யவே ப்ராரப்த கர்மா ஆயத்தமாய் வந்து விடுகின்றது. உண்மை இவ்விதம் ஆதலால் இப்போது வரும் இன்ப துன்பத்திற்கு ப்ராரப்த கர்மமே முக்கிய ஹேதுவாய் இருக்கின்றது.
இங்ஙனம் அறிய வேண்டியதாய் இருக்க, மனிதர் அவிவேகத்தால் இவ்வாறு அறியாமல் இப்போது நிகழும் சுக துக்கங்கள் எல்லாம் இப்போது செய்யும் காரியங்களின் பயன் என்றே எண்ணுகின்றனர்.
இப்போது செய்யும் செய்கைகளே ஏது எனக் கொண்டோமானால், உலகில் நல்ல காரியங்களைச் செய்வோர் எல்லாம் ஸுகமும், கெட்ட காரியங்களைச் செய்வோர்கள் எல்லோருக்கும் துக்கமுமே வரவேண்டும் என்றே ஏற்படுகின்றது. னால், உலகில் அப்படிப்பட்ட நியமத்தைக் காணோமே? நல்ல காரியங்களைச் செய்துகொண்டு துக்கத்தை அனுபவித்தலையும், கெட்ட காரியங்களைச் செய்துகொண்டு சுகத்தை அனுபவித்தலையும் காண்கின்றோமன்றோ? இதற்குக் கதி சொல்லவழியில்லாமல் போகின்றது.
ஆதலால் இப்போது வரும் இன்பதுன்பம் பூர்வகர்ம்ப் பயனே என்றும், இப்போது செய்யும் புண்ணிய பாபங்களுக்கு ஜன்மாந்திரத்தில் பயன் என்றும் அறிந்து கொள்ள வேண்டியது.
சங்கை: ப்ராப்த கர்மாயத்தமாகவே இன்ப துன்பம் வருமென்று சொல்லப்பட்டதே. இன்ப துன்பமாவது மானஸிகமாகிய விருத்தியே அன்றோ? ப்ராரப்த ஆயத்தமாக வருவது இப்படிப் பட்ட மானஸிகமாகவேயுள்ள விருத்தி மாத்திரமா? அவ்விருத்திக்கு ஸாதனங்களாகிய செல்வம் வியாதி, தாரித்திரியம் முதலியவைகளும் கூட ப்ராரப்தாயத்தமாகவே வருவனவா? செல்வம், வியாதி, தாரித்திரியம் முதலியவைகளுக்கு ஏதுவாய் காணப்படும் வியாபாரம், உத்தியோகம், கெட்ட நடத்தை, வ்ரத-உபஸ்தான-தர்மங்கள் முதலியவைகளும் கூட பராரப்தாயத்தமாகவே வருவனவா?
இன்ப துன்பத்திற்கு நேரில் ஸாதனமான செல்வம், வியாதி, தாரித்திரியம், முதலியவைகள் மாத்திரமே ப்ராரப்தாயத்தமாக வருவன. அவைகளுக்கும் ஸாதனங்களான வியாபாரம், துர்மார்க்கம், வ்ரத-உபஸ்தான தர்மங்கள் முதலியனவும் ப்ராரப்த கர்மாயத்தமாய் வருவன என்பது தவறேயாகும்.
அவைகளையும் ப்ராரப்தாயத்தமாக வருவன என்போமானால், “இத்தகைய வியாபாரம் கூடாது. துர்மார்க்கம் செய்யாதே. வ்ருத-உபஸ்தான-தர்மங்களைச் செய் என்பது முதலிய விதிவிலக்குகள் வீண் என்றே முடியும். ஏனெனின் ப்ராரப்தாயத்தமாக வருவதைத் தடுக்க எவராலும் இயலாதென சாஸ்திரங்கள் கூறுகின்றமையால் அதே சாஸ்திரங்களில் துர்மார்க்கம் முதலியவை கூடாது, வ்ருத-உபஸ்தான-தர்மாதிகளைச் செய் என்று சொல்லியிருக்கின்றமையால், துர்மார்க்க, வ்ருதோபஸ்தான தர்மாதிகளை மனிதர் தம் இச்சையால் செய்யவும், தவிர்க்கவும் கூடும் என்று அறியப்படுகின்றது. தம்மிச்சையால் செய்யப்படுவதும் தவிர்க்கப் படுவதுமாகிய செய்கைகள் எல்லாம் வாஸனையாலேயே வருவனவன்றி ப்ராரப்த்தால் அல்ல என்பதே சாஸ்திரங்களின் நிர்ணயம்.
பூர்வம் தேஹத்தால் செய்யப்பட்ட பாப புண்ணியங்கள் பின்வரும் ஜன்மத்தில் தேக மூலமாகவே பயன் பட்டு துக்க சுகங்களைத் தரும். இந்திரியங்களால் செய்யப்பட்ட கர்மங்கள் இந்திரிய மூலமாகவும், மனோ மாத்திரத்தினால் செய்யப்பட்ட கருமங்கள் மனோ விருத்தி மாத்திரத்தினாலும், ஸ்வப்னாதிகளில் இன்ப துன்பங்களைத் தரும்.
உதாரணமாக ஒருவன் இன்றிரவில் சரீரத்தில் வ்ரணம் (காயம்) ஏற்பட்டு அதன் மூலமாய்த் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பது மட்டில் ப்ராரப்த கர்மாயத்தமே தவிர, துன்மார்க்கம் செய்ததனாலேயே அந்த வ்ரணம் ஏற்பட வேண்டும் என்றாவது, அல்லது ஸந்மார்க்கத்தில் சென்றே அங்ஙனமாக வேண்டும் என்றாவது அவனது கர்மாவினால் விதிக்கப் பட்டிருக்கும் என்பதல்ல. ரக்த காயம் ஏற்பட்டு துன்புற வேண்டும் என்பது மட்டுமே கர்ம நியதம். ஆனால், அது ஆலயாதிகளுக்கு ஸ்வாமி தரிசனம் செய்யப் போவதில் நிகழ்ந்தாலும் நிகழலாம். அல்லது, துர்மார்க்கம் செய்யப்போன இடத்தில் அடி, சிகைச்சேதம் முதலிய சிக்ஷைகளால் நிகழ்ந்தாலும் நிகழலாம். துர்மார்க்கம் செய்யப்போவதோ, ஸத்காரியம் செய்யப்போவதோ இவை முதலியன அவரவர் வாஸனையாலேயேயாம் என்று அறிக.
வாக்கு மனக்காயங்களால் செய்த கர்மாவின் பயனை முறையே வாக்கு மனக் காயங்களாலேயே அனுபவிக்க வேண்டும் என்பது மட்டில் பூர்வ கர்ம நியதம் என்பதையே நிர்ணயமாகக் கொள்ள வேண்டும்.
இவ்வுண்மையானது மஹாபாரதம் சாந்திபர்வம் மனு ப்ருஹஸ்பதி ஸமாகம ப்ரகரணம் முதலிய இடங்களில்...
“சரீரத்தால் எக்கருமத்தைச் செய்கின்றானோ அதன் பயனைச் சரீரத்தாலேயே அனுபவிக்க வேண்டும். சரீரமே சுகத்திற்கும் துக்கத்திற்கும் ஆயதனமாம். வாக்கினால் எக்கருமத்தைச் செய்கின்றானோ அதன் பயனை வாக்கினாலேயே அனுபவிக்க வேண்டும். மனஸினால் எக்கருமத்தைச் செய்கின்றானோ அதன் பயனை மானஸிக விஷயத்தாலேயே அனுபவிக்க வேண்டும்”
என்பது முதலிய வாக்கியங்களால் உபதேசிக்கப் பட்டிருக்கின்றது.
ஒருவன் சுரோத்திரம் (காது) எனும் இந்திரியத்தினால் பூர்வ ஜன்மத்தினில் ஏதோ ஓர் புண்ணியம் செய்திருந்தான் என வைத்துக் கொள்வோம். அதன் பயன் இப்போது அவ்விந்திரிய மூலமாகவே அனுபவிக்கப் படும் சுகமாயிருக்க வேண்டும். அம்மட்டும் ப்ராரப்த கர்மமேயன்றி அது துர்மார்க்கப் பாட்டைக் கேட்டே ஏற்பட வேண்டும் என்றாவது, ஸத்வாக்கியங்களை சிரவணம் செய்தே வரவேண்டும் என்றாவது நிர்ணயிக்கப் பட்டதல்ல. துர்மார்க்க பாட்டையோ ஸத் வாக்கியங்களையோ சிரவணம் செய்தல் அவரவரது வாஸனையாலேயேயாம். இங்ஙனமே மற்ற இந்திரியங்களால் நிகழும் அனுபவத்திலும் ஊஹித்துக் கொள்க.
சங்கை: ப்ராரப்த கர்மா இந்த தேஹத்தையும் இதனால் ஜீவிக்க வேண்டிய காலத்தையும் அப்படியே வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களையும் தருகின்றது என்று சொல்லப் பட்டதே? தேஹமே ப்ராரப்தம் என்று பெரியோர் சொல்லுகின்றனரே? அம்மட்டோடே விடாமல், அது தேஹம், ஆயுள், போகம் என முவ்வகையாய் பயன் படுகின்றது என்று ஏன் சொல்ல வேண்டும்?
அன்றியும், இம்மனித தேஹமானது ஓர் பெரும் புண்ணியத்தினால் வந்தது என்று சொல்லப் பட்டதே. அவ்வாறு புண்ணியத்தின் பயனாக வந்த இந்த தேஹத்தினால் வாழ் நாட்களின் இடையில் துக்கங்களையும் அனுபவிக்கும்படியாதல் ஏன்? புண்ணிய மயமாகிய தேஹம் தோன்றியது முதல் அழியும் வரையில் இன்பத்தையே அனுபவித்தல் அல்லவோ உசிதம்? அப்படியிருக்க பாபப் பயனாகச் சொல்லப்பட்ட துன்பத்தையும் அனுபவிக்கக் காண்கின்றோமே. இதனை எப்படி ஒவ்வுவது?
விளக்கத்துடன் பதில்கள் மேலும் தொடரும்....
2 comments:
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
இந்நடை கடினம். நீங்கள் குறிப்பிட்ட எல்லா கருத்துக்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
இந்நடை "மணிப்பிரவாளம்" என தமிழில் வழங்கப்படும்.
பண்டைய தமிழ் சாத்திர நூல்கள் இந்நூல்களிலேயே வேதியர்களால் எழுதப்பட்டுள்ளன. அதை தழுவி எழுதியுள்ளதால் இவை கடினமாயின.
இதை திருத்த முயற்சிக்கிறேன்.
தங்கள் கருத்துக்களுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றி.
ஜயராமன்
///அப்பியஸித்தவன்
தகைத்து
நிக்ரஹிப்பது.....
இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்னு சத்தியமா புரியலை.////
அப்பியஸித்தவன் - முயற்சித்தவன்
தகைத்து - தகர்த்து
நிக்ரஹிப்பது - தடுப்பது
///வைதிக ஸ்ரி அப்படிங்கறது காஞ்சி சங்கராச்சாரியார் ஆரம்பிச்ச பத்திரிக்கைன்னு எங்கெயோ படிச்ச மாதிரி இருக்கு.உங்க பதிவு அந்த பத்திரிக்கையோடு சேர்ந்ததுங்களா,இல்லை தனியா? ///
ஆம்.
///ஏன் இவ்வலவு கடினமான தமிழ்ல எழுதறீங்க?///
இவ்வவ்வு = இவ்வளவு
நன்றி
ஜயராமன்
Post a Comment