Friday, June 23, 2006

அகலிகை

அகலிகை. இது தழிழாக்கப்பட்ட பெயர். சரியான பெயர் = ‘அஹல்யா’ . அதாவது, ‘அழகின்மையே இல்லாதவள்’ என்று பொருள். அதாவது, அழகே வடிவானவள்.

இவள் கதை வினோதமானது. ஆச்சரியகரமானது. பலப்பல பரிமாணங்களை தாங்கியது. ஆனால், பெண்ணியவாதிகளின் பலத்த சர்ச்சைக்கு இலக்கானது.

கற்பு என்னும் கனலுக்கு சனாதன தர்மத்தில் சரியான இலக்கணம் என்ன என்பதை இவள் கதை நமக்கு உணர்த்துகிறது.

அகலிகை படைப்பும் அவள் வாழ்வும் வினோதம்! அதனால், அவள் பெற்ற தாழ்வும், இறுதியில் மீள்வும் அந்த மீள்வு கொடுத்த புகழும் மேலும் வினோதம்.

அகலிகை உடம்பாலும், மனதாலும் கெட்டவள். ஆனால், அதற்காக அவள் புகழ் அழிக்கப்படவில்லை. மாறாக, கற்பரசிகளில் முதன்மை தகுதி பெற்றவள். புராணங்களில் பேசப்படும் ஐந்து பதிவிரதைகளில் முதலில் வணங்கப்படுபவள். பிராட்டி சீதையைக்கூட இவ்விழயத்தில் முந்தியவள். இதுதான் ஆச்சரியகரம்.


இதுவே பெண்மைக்கும் கற்புக்கும் சனாதன புராணம் காட்டும் நியதி. கற்பு சாஸ்திரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இவள் கதை ராமாயணத்தில் மிகச்சிறிதாக பேசப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் ஒரு நாற்பது ஸ்லோகங்களில் இவளின் நிகழ்ச்சி அடங்குகிறது. ஆனாலும், அகலிகை மிகப் பெரிய சக்தியாக பேசப்படுகிறாள். அகலிகை கதை பாடாமல் ராமாயண காதை பேசப்படுவதில்லை.

அகலிகையின் கதையில் நுட்பங்கள் பலருக்கு தெரிவதில்லை. அகலிகை தவறு இழைக்காதவள் என்கிறார்கள். அகலிகை ராமர் கால்பட்டு சாபம் நீங்கினாள் என்கிறார்கள்.

இவள் கதையை முழுமையாக எழுதவும், கற்பு நெறிக்கு சரியான இலக்கணத்தை சுட்டிக்காட்டவும் இந்த பதிவு இட ஆசைப்பட்டேன்.

விச்வாமித்திரர் ஐயனை காட்டுக்கு அழைத்துப்போனது, பிராட்டியை மணமுடிக்க என்று புராணக்காரர்கள் பேசுகிறார்கள். ஆனால், அருணகிரியார் அவ்வாறு சொல்லவில்லை. ஐயன் காடேந்தது அகலிகைக்கு அருள் வழங்க என்கிறார்.

“கல்லிலே பொற்றாள் படவேயது
நல்ல ரூபத்தே வரக்கானிடை
கௌவை தீரப்போகும் இராகவன்”
(கொள்ளையாசை – திருப்புகழ்)

ஆயிரம் வருடங்களாக ஐயன் ராமன் கால் தூசிக்கு ஏங்கியிருக்கும் இந்த பக்தையை மீட்க காட்டிற்கு வந்தான் ஐயன் என்கிறார் அருணகிரி.

முதலில் இவள் புராண கதை.உலகில் படைத்த பெண்களின் அழகை எல்லாம் சேர்த்து இவளை படைத்தான் படைப்புத்தேவன் பிரம்மா. அத்துணை அழகு.

படைத்தவன் அவளை கௌதமரிடம் மணமுடித்தான். கௌதமர் சப்தரிஷிகளில் ஒருவர். தவத்தில் மிகப் பெருமை வாய்ந்தவர். அவர் உயரிய பண்புகளை உடையவர். பிரம்மா, இந்த அழகைத்திரட்டிய பெண்ணை காக்க புலன்களை அடக்கிய முனிவரே சிறந்தவர் என்று கருதினான் போலும்.

காமம் யாரை விட்டது? அது நம் படைப்பின் காரணம் இல்லையா! நம் உடற்கூறின் உந்துதலில் நியதிகள் சிலசமயம் கண்ணுக்கு தெரிவதில்லை போலும். மாற்றான் மனைவிக்கு ஏங்கினான் தேவன் இந்திரன்.

இடையே ஒரு விளக்கம். தேவர்கள் நம்மைப்போல கர்மங்களுக்கும், வாசனைகளுக்கும் (ஆசை, வெறுப்பு) உட்பட்டவர்கள். இவர்கள் தெய்வம் இல்லை. (பார்க்க என் முந்தைய ஒரு பதிவு : ‘இந்து மத்த்தில் பல தைவம் உண்டா’.) சனாதன தர்மத்தில் ‘முப்பத்து முக்கோடி தெய்வங்கள்’ என்றெல்லாம் பேசுவதும், எழுதுவதும் அறியாமை மூடத்தனம். தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் வித்தியாசம் தெரியாததால்.

காமத்தால் அறிவு மங்குகிறது. ‘மையலால் அறிவு நீங்கி’ என்பது கம்பன் வரிகள். இந்திரன் சொல் கேட்டு சந்திரன் நள்ளிரவில் கோழிபோல கூவுகிறான். முனிவர் எழுந்து நதிக்கரைக்கு குளிக்க செல்லுகிறார்.

இந்து சாத்திரம் ஒரு அதீதமான விஞ்ஞானம். இங்கு கோட்பாடுகள் நம்பிக்கையால் மட்டும் நிகழ்வதில்லை. மண்ணால் ஆன உடலை மந்திர உடலாக்க நித்தமும் முயற்சி தேவை. மந்திரங்கள் மொழிகள் அல்ல. அவை தகுந்த குருவினால் ஏற்றப்படும் மின்சார கோள்கள். அவற்றை தக்க வைத்துக்கொள்ள வாழ்வாங்கு வாழவேண்டும். வெறும் மந்திர புத்தகத்தை படித்தால் இறையாண்மை வந்துவிடாது.

அருணோதய காலத்தில் (காலை சுமார் 4 ½ மணி அளவில்) குளிக்க வேண்டும் என்கிறது சாத்திரம். ஆதவன் எழும் முன்னே எழாதவன் பாபங்களை சுமக்கிறான். ராமாயணத்தில் பரதன் ஐயனை காட்டுக்கு அனுப்ப தான் காரணமாகியதற்கு வருந்துகிறான். அப்போது, ராமனை காட்டிற்கு அனுப்பியவர்கள் எத்துனை பாவங்களை சுமப்பார்கள் என்று சபிக்கிறான். அதில் ஒன்று, அதிகாலை தூங்குபவர்கள் பெறும் பாவம்.

இந்திரனோ முனிவர் உருவில் வந்தான். அவள் இந்திரன் என்று அகலிகை அறியாமல் இருந்தாள் என்று சிலர் பேசுவதும் தவறு. பெண்ணுக்கு மாற்றானை புரியாதா என்ன? ஒட்டு மீசை வைத்து உலகையே ஏமாற்றுவது இந்நாளைய சினிமாவில்தானே சாத்தியம்.

கணவன் கால் செருப்பை கழற்றும் சத்தம் கூட மனைவிக்கு தெரியும் என்பார்கள்.

தேவேந்திரனை கண்ட அகலிகை அவன் மீது மையல் கொண்டாள்.

அகலிகை அறியாமல் குற்றம் செய்தாள் என்று கவிகள் மழுப்பவில்லை. தன் அழகை அனுபவிக்க தேவேந்திரனே வந்தான் என்று ஆணவத்தில் சந்தோஷப்பட்டாள் என்கிறார் வால்மீகி. ('தேவராஜ குதூஹலாத்'). இவ்வாறு தெரிந்து தவறிழைத்ததால் அவள் தாழ்ந்து போனாள் என்கிறான் கம்பநாடான்.

தக்கது அன்று என்ன ஓராள்...
தாழ்ந்தனள் இருப்பத் தாழா
முக்கணான் அனைய ஆற்றல் ...
முனிவனும் முடுகி வந்தான்....

சென்ற முனிவர், காலம் தவறாக தென்பட்டதை உணர்ந்து திரும்புகிறார். அத்துணை தவ வலிமை பெற்ற முதலிடை முனிவர்களில் ஒருவருக்கு நடக்கும் பிழை தெரியாமல் இருக்குமா என்ன? ஆனால், முன்னமேயே தெரிந்து அவர் அதை தடுக்க மாட்டாததே ஒரு ஆச்சரியம். இறைவன் சித்தத்தில் முனிவரின் கவனம் முன்னமேயே இதில் விழவில்லை போலும்!

முனிவர் திரும்பியதும் இந்திரன் பூனை வடிவம் எடுத்து தப்பியோட பார்க்கிறான். முனிவரிடம் தப்ப முடியவில்லை.

உலகிற்கு நிரந்தரமான நெடிய பழி தேடி வைத்தவள் அகலிகை (இது கம்பன் வரிகள்). திரும்பிய முனிவரை பார்த்து பயந்து நிற்கிறாள். 'ஒரு விலைமகளைப் போல நடந்து கொண்ட நீயும் கருங்கல்லாய் கிட..' என்று அகலிகையை சபித்தார் முனிவர்.

"மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்
கல்லியல் ஆதி என்றான் கருங்கல்லாய் மருங்கு வீழ்வாள்."

கருங்கல்லாய் ஆனாள் என்பது புராண செய்தி. அதை ஒட்டியே கம்பன் இங்கு பாடுகிறான். "கல்லியல் ஆதி" என்கிறான்.

ஆனால், ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் அவ்வாறு இல்லை. 'அன்ன ஆகாரம் இல்லாமல், யார் கண்ணிலும் படாது இங்கேயே நெடுநாள் கிட' என்பதாகவே சபிக்கப்படுகிறாள். "வாயுபக்ஷா நிராஹாரா தப்யந்தீ பஸ்மசாயினீ" என்பதே வால்மீகி வாக்கியம்.

இது சாபமா என்று கேட்டால், முழுதாக சாபம் இல்லை என்பேன். தவம் செய்து கிட என்கிறார் முனிவர். தவம் செய்வது தண்டனையா? இல்லையே? தண்டனைகள் மிருகங்களை இன்னும் கொடிய மிருகமாக்க இல்லை! அவை மிருகத்தனம் களைந்து தேவ ஒளியை தோற்றுவிப்பதற்கே!

இதுவே முனிவர் அளித்த சாபம் என்கிற வரம்.....

இந்த சாபத்தில் இன்னொரு பாடமும் இருக்கிறது.

கம்பன் சொன்ன 'கல் போல் கிட' என்பது ஏன்? அந்நிய ஆடவன் தீண்டும்போது (மனதை, உடலை) கல் போல் கிடக்க வேண்டியவள் பெண். அப்படி இல்லாது இருந்ததால் 'கல்லியல் ஆதி' (கல் போல் கிட) என்று உணர்த்துகிறார் முனிவர். சாப வடிவில்.

அகலிகை சாபம் பெற்றாள். ஆனால், தேவேந்திரனுக்கு என்ன சாபம் கிடைத்தது? பெண்ணியவாதிகள் அகலிகையே கஷ்டப்பட்டாள், வழக்கம்போல ஆண்கள் தப்பிவிட்டார்கள் என்கிறார்களே, அது மிகவும் தவறு.

பாவத்திற்கு மூலமான இந்திரனுக்கு தண்டனை இல்லையா. நிச்சயம் இருந்தது. அது அகலிகையை விட கடுமையாக இருந்தது.

அகலிகைக்கு கிடைத்ததோ நிராகரிப்பு. இது மனதை வாட்டும். ஆனால், தேவேந்திரனுக்கு கிடைத்ததோ அவமானம். ஆயிரம் பங்கு கொடியது. இது உயிருடன் எரிக்கும்.

முனிவர் இந்திரனை மேலே சாபமிட்டார் இவ்வாறு...

‘தேவேந்திரா! இந்த பாவச்செயலுக்கு உனக்கு என்ன தண்டனை தெரியுமா? உன் வாழ்நாள் முழுக்க நீ அலியாவாய். அது மட்டும் உனக்கு போதாது. எந்த யோனியில் நீ லயித்து இங்கு வந்தாயோ, அந்த உறுப்பு உன் உடலெங்கும் ஆயிரக்கணக்கில் உருவாகட்டும்.’

இதுதான் அந்த தவசி சொன்ன சாபம்.

அப்பப்பா என்ன கொடுமை!! கல்லாகி காட்டில் கிடப்பதை விட ஆயிரம் பங்கு கொடியது. அவமானத்தில் ஒளிந்து ஒளிந்து வாழ்வது.

இந்த கொடிய சாபம் பெற்ற இந்திரன் இந்த சாபத்துக்கு தக்கவனே!!

(பிறகு மற்ற தேவர்கள் இந்திரனை அழைத்து அவனுக்கு பல தவத்தை செய்வித்து அவன் உடலில் தோன்றிய உறுப்புகளை ஆயிரம் கண்களாக மாற்றி அவன் ஒருவாறு அவமானத்துடன் வாழ வழி செய்கிறார்கள்... அது ஒரு கிளைக்கதை..

இந்த கிளைக்கதையின் தாத்பர்யம் என்ன?

அதாவது, அவமானம் இந்திரனுக்கு ஒரு குறியாக (symbol) ஆக மட்டுமே இருக்கட்டும். அவனை அவமானப்படுத்தும் நோக்கில், பெண்ணினத்தை அவமானப்படுத்த வேண்டாம் என்பது இங்கு குறிக்கிறது.... )

தனக்கேற்பட்ட சாப நிலை குறித்து அகலிகை விக்கித்து நிற்கிறாள்.

அந்த தவக்கனல் வருந்தி வாடும் அகலிகைக்கு மோட்சமும் வழங்குகிறார்.

சாப விமோசனம் எப்போ என்று கதறி அழும் அகலிகைக்கு முனிவர் வாயிலிருந்து "தசரதன் மகனாக பிறக்கும் இராமன் என்பவன் வரும் போது அவன் பாத தூளி உன்மேல் படும்போது இந்த கல் வடிவை விடு" என விமோசனத்திற்கு வழி கிடைக்கிறது.

("தண்டார்த் தசரத ராமன் என்பான் கழற்றுகள் கதுவ இந்தக் கல்லுருத் தவிர்தி என்றான்")

இது வாடலில் முனிவர் கொடுத்த ஒரு சிறு சுகம். மீளுகைக்கு வழி தெரிந்து காத்திருத்தலில் வலி குறைகிறது.

ராமன் கால் பட்டு எழுந்தாள் என்று பலரும் சொல்வதில் முழு உண்மையில்லை.

ராம்பிரான் கால் தூள் பட்டு (கால் பட்டு இல்லை!) அகலிகை மீண்டாள் என்றே வால்மீகியும், கம்பனும் விளக்கமாக சொல்கிறார்கள் ("கழல் துகள்" என்றே கம்பன் பாடலில் வருகிறது).

என்ன இருந்தாலும் அகலிகை மாற்றான் மனைவி. ஏக பத்தினி விரதனான ஐயன் ராமன் கால் அவள் மேல் பட்டது என்பது கூட சரியில்லை என்பதே கவிகளின் தெளிவு.

ஆச்ரமத்துக்கு ஏவிய ஐயன் கால் துகள் பட்டு அகலிகை கல்லிலிருந்து உரு பெற்று நிற்கிறாள். அகலிகை எழுந்ததும் 'அன்னையே' என்று அவளை அழைக்கிறான் ராமன்.

அவள் யார், ஏன் கல்லில் மறைந்திருந்தாள், இப்போது எப்படி தோன்றினாள் என்று விச்வாமித்திரர் விளக்குகிறார்.

அவள் வரலாற்றை (வழி தவறிய விவரத்தை) அறிந்ததும் ராமன் மீண்டும் அவளை 'அன்னையே' என்று அழைக்கிறான்.

அவன் அகலிகை மேல் இருந்த முதல் எண்ணத்தை சிறிதும் மாற்றவில்லை.

பொதுவாக பெண்களை அம்மா, தாயே என்று மரபாக அழைப்பதும், அவள் தாழ்ந்துவிட்டாள் என்று அறிந்ததும் மாறுவதும் வழக்கம்தானே?

ஆனால், இராமனோ "போது நீ அன்னை என்று பொன்னடி வணங்கிப்போனான்.." என்கிறார் கம்பன்.

அதாவது, மறுபடியும் அவளை அன்னையே என்று அழைத்து அவள் காலடியில் விழுந்து வணங்கி விடை பெறுகிறான் ராமன்.

என்ன ஆச்சரியம்! ஒரு முன்னாள் குற்றவாளியை இன்னாள் அருள்தலைவன் வணங்க வேண்டுமா? அதுவும் அன்னையே என்று அழைக்க வேண்டுமா?

அகலிகை ராமனுக்கு அன்னைதான்! மிகவும் மூலமான அன்னை!

இந்த விளக்கம் பேராசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் சொல்லி கேட்டிருக்கிறேன்...

இராமன் அன்னையே என்றழைக்க உரிமை உள்ளவர்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவர். தன்னை பெற்றவள், தகப்பனின் மாற்று இல்லத்தரசிகள் என்ற முறையில்...

ஆனால், அகலிகை..

சாபம் பெற்ற நாள் முதல் ராமனை எதிர்பார்க்கிறாள் அகலிகை.

தசரதன் மகனாக அந்த இறைவனே இராமனாக வரவேண்டும் என்று அகலிகை முதலில் அறிவாள்.

இராமன் தசரதன் மைந்தனாகும் முன்னே முனிவரின் வாயால் பிறந்துவிட்டான். உண்மைதானே!

ஊன் உடம்பாக கோசலை திருவயிறில் தாங்கும் முன்னே, அகலிகையின் மனக்கருவில் உருவாகிவிட்டான் எம்பிரான். ராமனுக்காக, தசரதனுக்கு முன்னே, பல வருடம் மனதில் தவம் இருந்தாள் அகலிகை...

அப்படியானால், அகலிகை இராமனுக்கு அன்னைதானே??

அதனால், இராமன் கௌதம முனிவரை அணுகி "நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ நேர்க" என்கிறான். "நெஞ்சில் குற்றமற்ற இவளை நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்கிறாள்.

உடலால் ஏற்பட்ட குற்றங்களுக்கு பெண் என்றும் பொறுப்பல்ல. உடற்கூறுதான் காரணம். மனதால் ஏற்படும் தவறுக்கே மனிதன் பொறுப்பாகிறான்.

தீய எண்ணத்தால் ஏற்படும் தவறுக்கே மனிதன் பொறுப்பாகிறான். தீய எண்ணத்தில் தோன்றிய தவறை நல்ல எண்ணத்தால் மட்டுமே அழித்து எழுத முடியும். ராம, ராம என்ற தாரக மந்திரத்தால் ஆண்டுகள் பல ஐயனுக்காக ஏங்கி காத்திருந்த அந்த மனதில் எல்லா குற்றங்களும் பொசுங்கிவிட்டன. ராமனை வணங்கிய நெஞ்சு குற்றமற்றது.

அதனால், அவள் "நெஞ்சினால் பிழைப்பிலாள்" என்று ஆகிறாள்.ராமாயணம் காட்டும் நீதி இதுவே! கற்பு என்பது போட்டால் உடைந்துவிடும் மண்சட்டி அல்ல.

இந்த கதையில் நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம். அகலிகை வந்தவன் மாற்றான் இந்திரன் என்று அறிந்தும் அவன் பேற் கொண்ட ப்ரேமையால் மயங்கி தவறிழைத்தாள். அதை நினைத்து மனமாற வருந்தி மன்னிப்பு கேட்கிறாள். அவள் மனமார திருந்தியதால், முனிவர் கௌதமரும் நல்வழி காட்டுகிறார்.

ஒவ்வொரு வினையும் எதிர்வினை கொண்டதாகிறது. ஒரு காரணமும் ஒரு காரியத்தில் விளைகிறது. ஒவ்வொரு தவறும் தண்டனைக்கு உரியதாகிறது.

ஒவ்வொரு வருந்துதலும் மீட்புக்கு கதவு திறக்கிறது. ஒவ்வொரு தவத்திற்கும் பலன் கிடைக்கிறது.

இதுதான் இங்கு காணும் கோட்பாடு.

தன் கதையால், அகலிகை நமக்கு வேதாந்தத்தையும் போதிக்கிறாள். முனிவர் கௌதமர் ஒரு ஜிதேந்திரியர் (புலன்களை வென்றவர்). அவர் அகலிகை என்கிற பக்தியுடன் வாழ்கிறார்.

அந்த பக்தி இந்திரன் என்கிற மனதால் களங்கப்படும் போது, மனதுக்கு அடிமையாகி அந்த ஜிதேந்திரயருடமிருந்து நழுவுகிறது.

பின், அந்த பக்தி புலன்களில் வெறுப்புற்று வருந்தி, கல் போல தவத்தில் கிடக்கிறது. (அதாவது, புற உலகிடமிருந்து ஒடுங்கி... அதாவது புலன்களிடமிருந்து விடுபட்டு....)

அந்த தவத்தின் விளைவாக, அகண்டமான இந்த பிரம்மத்தின் கருணையால், களங்கம் கலைந்து தன் சுய பிரதாபம் ஏற்று தன் ஜிதேந்திரிய தலைவனும் இணைகிறது.

இக்கதை பாவர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கிறது.

தவத்தால் பாவங்களை கழுவி தன் பழைய பிரகாசத்தை எந்த ஜீவனும் அடைய முடியும் என்பது இந்த கதையின் திரிபு.

ஜீவன் ஆசாபாசங்களால் எப்போதும் கட்டுண்டவன். அதனால் தன் சீலத்தை இழந்தவன். அதை தவத்தாலும் தியாகத்தாலும் அவன் பெற வேண்டும்; பெற முடியும்.

இதைப்பெற ஆக்கமான ஒரு வளர் பாதையே மந்திரங்கள். தன் வழியில் சத்தியத்திலிருந்து விலகாமல் இருக்க அவன் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

அவ்வாறு மடத்தனத்தால் விலகினாலும், உண்மை வருத்தத்தில் விளைந்த கண்ணீர், மேலும் தவறிழைக்காமல் இருக்க உறுதி, உழைப்பில் விளைந்த தவம் என்பவற்றால் எந்த பாவமும் இல்லாது எறிந்து போகும்.

ராமாயணத்தில் மந்திர சாத்திரத்தை ஏற்றி இயற்றப்பட்ட அற்புதமான வடமொழி காவியம் 'அத்யாத்ம ராமாயணம்'. அதில் அகலிகை இராமன் குறித்து வணங்கிய ஸ்தோத்திரம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அகலிகை தன்னை மீட்ட அந்த சிறுவன் கோலத்தில் உள்ள ஐயனை துதிக்கிறாள்.

அந்த துதி பரம பாவனாமனது. பரம வீரியமானது. அந்த துதியில் மனமுருகி பாடுவோருக்கு ராமன் உருவம் கண்ணிலேயே காண்பது போன்று அமைந்திருக்கிறது. மிகவும் தரத்தில் வீழ்ந்து நாம் செய்யும் எல்லா பாவங்களையும் பொசுக்கும் அந்த மகா துதியை நாமும் துதித்து ஈடேறுவோமாக.

Friday, June 09, 2006

வினோபாஜீயும் பகுத்தறிவும்

நான் ஒரு சமயம் இரயிலில் போய்க் கொண்டிருந்தேன். யமுனை பாலத்தின் மீது வண்டி சென்றது. அருகிலிருந்த ஒருவர் மிக்க மகிழ்ச்சியோடு அதில் ஒரு காசை எடுத்து எறிந்தார்.

பக்கத்தில் பகுத்தறிவாளர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் 'நாடு ஏற்கனவே ஓட்டாண்டியாய் இருக்கிறது; போதாதற்கு இவர்கள் வேறு காசை வீணே எறிகிறார்கள்!' என்றார்.

நான் "நீங்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. எந்த பாவனையோடு அவர் ஒரு காசை எறிந்தாரோ அதற்கு நான்கைந்து காலணா மதிப்பாவது உண்டா இல்லையா?

பிற நல்ல காரியங்களுக்காக இக்காசைக் கொடுத்திருந்தால் இத்தானம் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். இதைப்பற்றி நாம் பின்னர் யோசிப்போம். ஆனால், அந்த பக்தர் இக்காசைத் துறந்தது, இது வெறும் ஆறல்ல, ஆண்டவனது கருணையே இவ்வாறு பெருகிக் கொண்டிருக்கிறது என்ற பாவனையினாலேயே ஆகும். இப்பாவனைக்கு உங்கள் பொருளாதார சாத்திரத்தில் ஏதேனும் இடம் உண்டா?

நாட்டின் ஆறு ஒன்றைக் கண்டதும் அவரது உள்ளம் உருகிப் போய் விட்டது. இப்பாவனைக்கு, உணர்ச்சிக்கு நீங்கள் மதிப்பளிக்க முடியுமானால், அதிலிருந்து நான் உங்கள் தேசபக்தி எவ்வளவு என்று அறிந்து கொள்வேன்" என்றேன்.

தேசபக்தி என்பதற்கு வெறும் சோறு என்பதுதான் பொருளா? நாட்டின் பெறிய ஆறு ஒன்றைப் பார்த்ததும் நம் செல்வம் அனைத்தையும் அதில் ஆழ்த்தி விடுவோம். அதன் பாதங்களில் சமர்ப்பித்து விடுவோம் என்ற பாவனை எழுமானால் அது எவ்வளவு பெரிய தேசபக்தியாய் இருக்க வேண்டும்?

அந்த எல்லாச் செல்வங்களும், அந்த மஞ்சள்-வெள்ளை கட்டிகளும், புழுக்களின் மலத்தினால் ஆன முத்துக்களும், நிலக்கரியினால் ஆன வைரமும் - இவை அனைத்தின் மதிப்பும் நீரில் ஆழ்த்தி விடத் தக்கவையே.

ஆண்டவனது பாதங்களின் எதிரில் இவற்றை எல்லாம் மண், இழிந்தவை என்றே மதி.

ஆற்றுக்கும் ஆண்டவனுடைய பாதங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைப்பீர்கள். இந்த சிருஷ்டி இருக்கிறதே, அதற்கும் ஆண்டவனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா இல்லையா?

"ஆறு என்பது பிராணவாயுவும், நீரகமும் சேர்ந்தது; சூரியனோ 'காஸ்' வெளிச்சத்திற்கு ஒரு பெரிய மாதிரி. அதை வணங்குவதாவது!"

உனது சோற்றுப்பானை இருக்கிறதே, அதைத்தான் விழுந்து கும்பிட வேண்டுமா? அச்சோற்றில்தான் அப்படி என்ன வைத்திருக்கிறது? அதுவும் பார்க்கப்போனால் ஒரு வெள்ளை மண்ணே. அதற்காக உனக்கு ஏன் நாக்கில் இவ்வளவு நீர் ஊறுகிறது?

இவ்வளவு பெரிய சூரியன் உதித்திருக்கிறது; இவ்வளவு அழகிய ஆறு ஓடுகிறது; இவைகளில் ஆண்டவனை உணர முடியாவிட்டால் வேறெங்குதான் உணர முடியும்?

ஆங்கிலக்கவி வோர்ட்ஸ் வொர்த் மிகுந்த துயரத்துடன், 'முன்பெல்லாம் வானவில்லைக் கண்டால் துள்ளிக் குதிப்பேன்; என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி எழும். ஆனால், இப்பொழுது நான் ஏன் மகிழ்ச்சியால் குதிப்பதில்லை? முன் இருந்த வாழ்க்கை இன்பத்தை இப்பொழுது இழந்து கல்லாகிவிட்டேனா?' என்று கேட்கிறார்.

அதாவது, பயனைக் கருதிச் செய்யும் பக்திக்கு, விவரம் அறியாத நாட்டுப்புற மக்களின் பக்தி-பாவனைக்கு, பெருமதிப்புண்டு.

இறுதியில் அதிலிருந்தே பேராற்றல் உதிக்கும். மனிதன் எத்தகையவனாக இருந்தாலும், ஆண்டவன் சன்னதிக்கு ஒருமுறை வந்துவிட்டால் அவன் மதிப்பிற்கு உரியவனாகி விடுகிறான்.

தீயில் எந்த மரத்தை இட்டாலும் அது பற்றி எரியும். ஆண்டவனிடம் பக்தி என்பது ஓர் அபூர்வமான சாதனை.

பயனை விரும்பிப் புரியப்படும் பக்திக்கும் ஆண்டவன் மதிப்பளிப்பான். பிற்காலத்தில் அந்த பக்தியே பயன் கருதாததாகி பூரணத்துவத்தை நோக்கிச் செல்லும்.

=====================

வினோபா பாவே - கீதைப் பேருரைகள். ஏழாம் அத்தியாயம். 'பிரபத்தி' யில் பக்கம் 114.
பிகு: இப்பதிவு சில அரைகுறை பகுத்தறிவு பதிவுகளின் 'கோயிலில் அபிஷேகம் ஏன்' போன்ற கேள்விகளுக்கு விடையாக உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பல்ல.