Monday, October 30, 2006

மருந்தா-சுகமா? - வைராக்ய சதகம்

இதுவரை பார்த்தது

16 காமத்தின் வீழ்ச்சி
17 சிவனின் தனித்துவம்
18 மீன்களிலும் தாழ்ந்தவன்

கவி மேலும் தொடர்கிறார்.


த்ருஷா சுஷ்யத்யாஸ்யே பிபதி ஸலிலம் சீதமதுரம்
க்ஷூதார்த: சால்யான்னம் கவலயதி மாம்ஸாதிகலிதம்
ப்ரதீப்தே காமாக்னௌ ஸூத்ருடதரமாலிங்கதி வதூம்
ப்ரதீகாரம் வ்யாதே: ஸூகமிதி விபர்யஸ்யதி ஜன: 19


तृषा शुष्यत्यास्ये पिबति सलिलं शीतमधुरं
क्षुधार्तः शाल्यानं कवलयति मांसादिकलितम्‌।
प्रदीप्ते कामाग्नौ सुदृढतरमालिङ्गति वधूं
प्रतीकारं व्याधेः सुखमिति विपर्यस्यति जनः॥ १९॥


tR^ishhaa shushhyatyaasye pibati salila.n shiitamadhura.n
xudhaartaH shaalyaana.n kavalayati maa.nsaadikalitam.h .
pradiipte kaamaagnau sudR^iDhataramaaliN^gati vadhuuM
pratiikaara.n vyaadheH sukhamiti viparyasyati janaH .. 19..


Meaning:
One drinks cool sweet water for mouth parched with thirst; the hunger-smitten eats rice, flavored with meat et cetera.; with passion afire, embraces the wife firmly; people (treat) these remedies for these diseases contrarily as happiness.


பொருளுரை:

(மனிதன்) தாகத்தில் வறண்ட வாய்க்கு குளிர்ந்த சுவையான தண்ணீர் குடிக்கிறான்; பசி தாக்கியவன் மாமிசங்கள் முதலியவை சேர்த்து சுவைப்பட்ட சாதத்தை சாப்பிடுகிறான்; காமாக்னி கிளறும்போது மனைவியை திடமாக அணைக்கிறான்; (இவ்வித) வியாதிகளுக்கு மாற்றான மருந்துகளை சுகங்களென்று எதிரிடையாக நினைக்கும் ஜனங்கள்.


விரிவுரை:

யாக்கையின் பிணக்குகள் தீர உணவும், உறக்கமும் இடையறாது ஏற்கப்படுகின்றன. தாகம், பசி, காமம் வாட்டும்போது உடல் தேடும் உணவும், உறவும் இந்த பிணக்குகளிலிருந்து தற்காலிக விடுப்புக்கே. இந்த தீர்வுகள் மருந்துகளே அன்றி சுகங்களாகா. இதற்கு இரண்டு சான்றுகள். இத்தீர்வுகள் பெறா உடல் வாடுகிறது. மேலும், இந்த தீர்வுகள் உடலுக்கு எப்போதும் தேவைப்படுவதும் இல்லை. இன்று சுகமாயிருப்பது பின்னொருவேளை சுகமாயிருப்பதில்லை. இவ்விரண்டு காரணங்களால் இவை மருந்துகள் என்பது தெரிகிறது. மருந்துகள் சுகங்களாகா. உடலுக்கு பிறப்பும், இறப்பும் நிரந்தர பிணிகளாயின. பசியும் வேட்கையும் தற்காலிக பிணிகளாகின்றன. இந்த தற்காலிக நிவாரணங்களுக்காக அல்லல்படுவோர் அற்பர்கள். மூலமான பிறப்பெனும் வியாதி ஒழிய மருந்து வேண்டுபவனே அறிந்தவன். பவமென்னும் இவ்வுடல் ஒழிவதே உண்மையான சுகம்.

Wednesday, October 25, 2006

மீன்களிலும் தாழ்ந்தவன் - வைராக்ய சதகம்

இதுவரை பார்த்தது

16ஆவது ஸ்லோகம் காமத்தின் வீழ்ச்சி

17வது ஸ்லோகம் சிவனின் தனித்துவம்

கவி மேலும் தொடர்கிறார்.

அஜானந்தாஹாத்ம்யம் பதது சலபஸ்தீவ்ரதஹனே
ஸ மீனோऽப்யஞானாத்வடிசயுதமச்னாது பிசிதம்
விஜானந்தோऽப்யேதே வயமிஹ விபஜ்ஜாலஜடிலான்
ந முஞ்சாம: காமானஹஹ கஹனோ மோஹமஹிமா 18


अजानन्दाहात्म्यं पततु शलभस्तीव्रदहने
स मीनोऽप्यज्ञानाद्वडिशयुतमश्नातु पिशितम्‌।
विजानन्तोऽप्येते वयमिह विपज्जालजटिलान्
न मुञ्चामः कामानहह गहनो मोहमहिमा॥ १८॥


ajaanandaahaatmyaM patatu shalabhastiivradahane
sa miino.apyaGYaanaadvaDishayutamashnaatu pishitam.h .
vijaananto.apyete vayamiha vipajjaalajaTilaan
na muJNchaamaH kaamaanahaha gahano mohamahimaa 18

A moth falls in fire not knowing its burning power; the fish
gets caught for food in baited hook in ignorance; and here we, despite aware of complex dangers of sensual pleasures, do not renounce them. Oh! how profound is the power of delusion! 18

தீவிரமாக தகிக்குமென்றறியாமல் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகள்; (ஆபத்தென்று) அறியாமல் தூண்டிலின் இறையை கவ்வி மாட்டும் மீன்கள்; காமசுகங்களின் ஆழமான ஆபத்துகளை அறிந்தும் இங்கே விட இயலாமலுள்ள நாம்; மோகங்களின் மகிமை எத்தனை கடுமையானது. 18


================
விளக்கவுரை:
அனைத்து உயிரனங்களும் புலனின்பத்தில் அழிகின்றன. உணவாசை, உடலாசை என்று வாழ்க்கையை தொலைக்கும் மீன்களும், விட்டில்களும் ஒரு விதத்தில் மனிதனைவிட மேலானவை. ஏனெனில், அவை, அறியாமல் உள்ளுணர்வில் வாழ்கின்றன.

ஆனால், பகுத்தறிவுள்ள ஒரே ஜீவனான மனிதன் மற்ற உயிரினங்களைவிட தாழ்கிறான். காரணம் - அவன் அறிந்தே தவறிழைத்து மாள்கிறான்.

பகுத்தறிவு பெற்றதாலேயே, மானிட ஜன்மம் கர்ம வினைகளுக்கு காரணமாகிறது. மற்ற பிறப்புகள் கர்மவினைகளை அனுபவிக்கவே படைக்கப்பட்டன.

ஆனால், மனிதர்களில், அறியாமல் கெட்டவர்களைவிட அறிந்து கெட்ட மனிதர்களே மிகுதி. இராவணன், துரியோதனன் முதலானோர் இதற்கு எடுத்துக்காட்டு. இகவாழ்க்கையிலும் உடலுக்கும், வாழ்க்கைக்கும் ஊறு என்று அறிந்தே மக்கள் அல்ப சுகங்களுக்காக பெரும் பலன்களை இழக்கிறார்கள். குடிக்கு கேடு என்று அறிவித்துக்கொண்டே கோடிகளாய் குடிகள் விற்கின்றன.

அறிதான மானிடப்பிறப்பில், இந்த உடலை பலனாக்கி உய்வோர் மிகச்சிலரே. அறிவினாலும் வெல்ல இயலாத இப்புலனின்பங்கள் எத்துனை சக்தி வாய்ந்தவை என்று வியக்கிறார் கவி.

Tuesday, October 24, 2006

சிவனின் தனித்துவம் -வைராக்ய சதகம்

முன்பு பார்த்தது 16ஆவது ஸ்லோகம் காமத்தின் வீழ்ச்சி


இதில் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலாக மேலும் தொடர்கிறார் கவி.

சிவனின் தனித்துவம்


ஏகோ ராகிஷூ ராஜதே ப்ரியதமாதேஹார்தஹாரீ ஹரோ

நீராகேஷூ ஜனோ விமுக்தல்லநாஸங்கோ ந யஸ்மாத்பர:

துர்வாரஸ்மரபாணபன்னக விஷவ்யாவித்தமுக்தோ ஜன:

சேஷ: காமவிடம்பிதான்ன விஷயான்போக்தும் ந மோக்தும் க்ஷம: 17


एको रागिषु राजते प्रियतमादेहार्धहारी हरो

नीरागेषु जनो विमुक्तललनासङ्गो यस्मात्परः।

दुर्वारस्मरबाणपन्नगविषव्याविद्धमुग्धो जनः

शेषः कामविडम्बितान्न विषयान्भोक्तुं मोक्तुं क्षमः॥ १७॥

eko raagishhu raajate priyatamaadehaardhahaarii haro

niiraageshhu jano vimuktalalanaasaN^go na yasmaatparaH .

durvaarasmarabaaNapannagavishhavyaaviddhamugdho janaH

sheshhaH kaamaviDambitaanna vishhayaanbhoktu.n na moktu.n xamaH 17

Shiva is unique among the sensuous, for he shares half the body with

His beloved; among the dispassionate no one excels Him in detachment from women. Rest of the people, stunned in infatuation by Cupid's irresistible arrows tipped with serpent poison, can neither enjoy their desires nor give them up at will. 17

தம் பிரியமானவளை பாதியுடலாக கொண்ட சிவன், பிரேமிகளில் சிறந்த ஒருவன். (அதே சமயம்), மோகமற்று பெண்ணுறவின்று விடுபட்ட ஜனங்களில் அவனை விஞ்சியவரில்லை. மற்றவர்களோ, தடையற்ற மன்மதனின் பாணமாகிய பாம்பின் விஷத்தால் மதிகலங்கி மோக மயக்கத்தில் விஷயங்களை முழுதும் அனுபவிக்கவோ, (அல்லது) விடவோ சக்தியற்றவர்கள். 17


விளக்கவுரை:


சிவன் மனித இலக்கணத்துக்கு வரையறாதவன். எல்லாம் விட்டொழிந்த யோகியாகவும், இல்லறம் போற்றும் குடும்பியாகவும் அவன் மிளிர்கிறான். அவன் ஆணுமல்லன், பெண்ணுமல்லன். உலகார் வேண்டாததை அவன் ஏற்கிறான். துன்பம், மயானம், தும்பை, எருக்கு, பனிமலை இவையெல்லாம் சிவார்ப்பணம். அவன் மிக்கோரமுதுண்ண தான் நஞ்சுண்ட மேலவன்.

அவன் ஒரே சமயத்தில் தக்ஷிணாமூர்த்தியாக ஞானத்தின் எல்லையை காட்டி, ஆனந்தத்தின் எல்லையாக நடராஜனாகிறான்.

அவனை நீக்கி, மற்றவர்கள் எல்லாம், இந்திரனோ, ப்ரும்மனோ, திருமாலோ, மனிதர்களோ, அரக்கர்களோ, பசுக்களோ அனைவரும், காமத்தால் மயங்கி சுழலுபவர்களே.

அதிலும் மனிதர்கள் நிலை பரிதாபகரமானது. மோகத்தில் தீர்க்கமாக வீழ மனமோ சக்தியோ இன்றி போனாலும், அதை முழுதும் ஒழித்துப்போடவும் இயலாமல் உழலுகிறார்கள் என்கிறார் கவி.

Monday, October 23, 2006

காமத்தின் அழிவு - வைராக்ய சதகம்

स्तनौ मांसग्रन्थी कनककलशावित्युपमितौ
मुखं श्लेष्मागारं तदपि च शशाङ्केन तुलितम्।
स्रवन्मूत्रक्लीन्नं करिवरशिरस्पर्धि जघनं
मुहुर्निन्द्यं रूपं कविजनविशेषैर्गुरु कृतम्॥ १६॥

ஸ்தனௌ மாம்ஸக்ரந்தீ கனககலசாவித்யுபமிதௌ
முகம் ஸ்லேஷ்மகாரம் ததபி ச சசாங்கேன துளிதம்
ஸ்ரவன்மூத்ரக்ளீன்னம் கரிவரசிரஸ்பர்தி ஜகனம்
முஹூர்நிந்த்யம் ரூபம் கவிஜனவிசேஷைர்குரு க்ருதம் 16

stanau maa.nsagranthii kanakakalashaavityupamitau
mukha.n shleshhmaagaara.n tadapi cha shashaaN^kena tulitam.h .
sravanmuutrakliinna.n karivarashiraspardhi jaghana.n
muhurnindya.n ruupa.n kavijanavisheshhairguru kR^itam.h .. 16..

breasts which are but two lumps of flesh are compared as golden vessels; the mouth, seat of phlegm and mucus, are compared to the moon; the loins, outlet for wet urine, are the forehead of an elephant; thus poets have glorified the contemptible human form.

மாமிசக்கோளங்களான மார்பகங்கள் தங்க கலசங்களென ஒப்பப்படுகின்றன; எச்சிலின் இருக்கையாக இருந்தாலும் வாயோ வெண்ணிலவுக்கு சமமாகிறது; பெருகும் மூத்திரக்கேடுடைய அரை இடுப்போ, யானையின் மத்தகமாகிறது. வெறுக்கக்கூடிய இவ்வுடலமைப்பை கவிகள் (எத்தனை) உயர்த்திவிட்டார்கள். 16

சௌந்தர்யம் மனதின் கற்பனை. காமம் மனதில் விளைவது. அழகான ரதிகளிடமட்டுமில்லாமல், ஜனங்கள் குரூபிகளிடமும் அதே வேகத்துடன் கூடுகிறார்கள்.

ஏனென்றால், காமம் மனதில் பிரியமான பிரமையை ஏற்படுத்தி அதிலேயே மக்களை மோகிக்க பண்ணுகிறது. அந்த பிரமை அடிக்கடி உருவகப்படுத்திக்கொள்ளும் சௌந்தர்யத்தின் நினைவால் எழுவது. யோகிகளும், குழந்தைகளும் இந்த நினைவுப்படுத்தல் இல்லாததாலேயே காமத்தில் வீழ்வதில்லை. சொல்லப்போனால், இந்த மல, அஸ்தி, உதிர கூட்டான இந்த உடல், நாடியால் கட்டப்பட்டு, மயிர் அடர்ந்த தோலினால் மூடிய ஒரு மாமிச கூடு. இது உண்மையில் வெறுக்கத்தக்கது. இதில் ரமிக்கும் மக்கள், கழிவில் பெருகும் கிருமிகளை ஒத்தவர்கள்.

அங்கங்களிலும், தோல் பரிமாணத்திலும் மயங்கும் கவிகள் வார்த்தைகளில் பிம்பம் வரைந்து இந்த காம மாயையை மேலும் மனதில் பூட்டுகிறார்கள்.

இந்த பிரமை மறைவதே வாழ்வின் முதல் வெற்றி.

இவ்வுடலாசைக்கு இளமையில் வாழ்க்கையும், முதுமையில் மானமும் பலியாகின்றன.

காமத்தால் கவிகளின் பொய்களை நம்பி, காலத்தின் சுழலில் சிக்கி, வாழ்க்கையின் இலக்கை இழந்து வீழ்ந்தோரை எச்சரிக்கிறார் பர்த்ருஹரி.

Saturday, October 21, 2006

உருவ வழிபாடு

பூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன.

உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி வாழத்தப்படுகிறது) என்றால் அவர்களுடைய படம், உருவச்சிலைக்கு இல்லாமல் அவரது உடலுக்கு செய்யப்படுகிறது என்கிறார்கள். உடல் உருவமில்லையா? சரீரம் உயிருள்ளதா அல்லது உடம்பில் உரையும் இந்த ஜீவன் உயிருள்ளதா? உடலில் உள்ள இந்த ஜீவனை பூசை செய்வது எப்படி நிகழும்? அது பூசைக்காக எங்கே கிடைக்கும்? பூசை உடலுக்குத்தான் நடக்கும், உடல் ஐம்பூதங்களாலான உருவம்.

உடலில் உள்ள உயிர் உடலுக்கு செய்யப்படும் பூசை, மரியாதைகளை தன்னுடையதாக எண்ணி அதனால் மகிழ்கிறது. இது உண்மை. ஆனால், எங்கும் வியாபித்திருக்கும் இறை விக்கிரக உருவத்தில் இருக்கிறதா இல்லையா? அது எல்லாம் அறிந்ததா அல்லது இல்லையா? சரீரத்தில் குடியிருக்கும் இந்த மனம், உடலுக்கு பூசை செய்பவன் எலும்பு, மாமிசம் முதலியவற்றிற்கு பூசை செய்யவில்லை, என்னையே பூசிக்கிறான் என்று நினைப்பது போல சர்வ-வியாபித்திருப்பவனும் விக்கிரக உருவிலும் இருப்பவன். பூசை செய்பவன் தன்னைத்தான் பூசித்துக்கொண்டிருக்கிறான், கல்லையோ மரத்தையோ பூசிக்கவில்லை என்பதை அறியமாட்டானா?

உயிருக்கே பூசை நடக்கிறது. ஜடத்திற்கு அல்ல. ஆனால், உருவத்தை மீடியமாக வைத்துக்கொள்ளாமல் உயிரை பூசிப்பது நிகழவே முடியாது. எங்கும் நிறைந்தவன், சர்வேசுவரன், எல்லாம் அறிந்தவனின் பூசை விக்கிரத்தின் மூலமாகச் செய்யாமல், சாதுக்கள், பெரியோர்களின் உடலின் மூலமாக செய்வதில் ஒரு குற்றம் நிகழ்கிறது. அந்த (சாது, பெரியோர்களின்) உயிர் சரீரத்தின் பூசையை தன்னுடைய பூசையாக எண்ணி ஏற்றுக்கொள்கிறது. பூசை செய்பவனுடைய பார்வையும் அந்த உடலிடமே இருந்து விடலாம்; இருந்து விடுகிறது. கல், மரம் முதலிய விக்கிரகங்களின் மீடியத்தின் மூலம் பூசை செய்தால் பூசை செய்பவனுடைய பார்வையில் கல், மரம் முதலியவை இருப்பதில்லை. எந்த உயிரும் இருப்பதில்லை. அவன் நேராக ஈசனையே, ஆராதனைக்குரியவனையே பூசிக்கிறான். அவனுடைய பூசையை இடையில் தன்னுடையதாக கருதும் ஜீவன் ஏதும் அங்கு இல்லை. ஆகவே அந்த பூசை நேராக ஈசனையே அடைகிறது.

“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” (சுக்ல யஜூர்வேதம் 32-2) என்கிறது வேதம். “அதற்கு உருவமில்லை” என்பது பொருள். ஏனெனில் ஆராதனைக்குறிய ஏதேனும் திருவுருவம் இருந்திருந்தால் அதை நேருக்கு நேர் காணாமல் எந்த விக்கிரமும் அமைய முடியாது. அவனும் வேறு மூர்த்தியை தன்னுடையதாக ஏற்பதில்லை. அப்போது பூசையே நாசமாகிவிடும். அவனுக்கு எந்த உருவமும் இல்லை. ஆகையினாலேயே எந்த விக்கிரகமும் அவனுடைய பூசைக்கு வழியாக முடிகிறது.

அவன் எல்லா திருவுருவங்களிலும் இருக்கிறான். எல்லாம் அறிந்தவனாக இருப்பதால் தனக்கே பூசை நடக்கிறது என்பதையும் அறிகிறான். உயிருக்கு பூசையின் பேறு கிடையாது. பூசையின் அறிவு இருக்கிறது. அந்த அறிவே அவனை திருப்தி செய்கிறது. நீங்கள் மரியாதைக்குறியவரை பூசை செய்யும்போது (வணங்கி வாழ்த்தும்போது) பூசைப்பொருட்கள் எல்லாம் அவரது உடலுக்கு, ஐம்பூத உருவத்திற்கே கிடைக்கின்றன. அவரது உயிருக்கு (மனம், ஜீவன்) தனது பூசையின் அறிவு மட்டும்தான் கிடைக்கிறது. அந்த அறிவே அவரை திருப்திப்படைய செய்கிறது.

ஏன் பூசை செய்யவேண்டும்? செயல் இல்லாமலோ, பொருட்களை அர்ப்பணிக்காமலோ, பாவனை பரிபக்குவம் அடையாது. அதனால் பூசை செய்யப்பட வேண்டும். நமது வாழ்வில் பொருளின் தேவையும், செயலின் பெருமையும் ஒன்றுக்கொன்று பொருந்தியுள்ளன. அதனால், நாம் பொருளை அர்ப்பணிக்காமலோ, செயல் செய்யாமலோ இருக்கும்போது நம் மனதில் பாவனையும் சரியாக அமைவதில்லை. தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தவும், பாவனையை வெளிக்காட்டி அதை திடப்படுத்தவும், பொருட்களை அர்ப்பணிப்பதும், செயல் மூலம் சேவை செய்வதும் வழியாகும்.

வாழ்வில் செயலின் பெருமையும், பொருளின் தேவையும் முடிந்துவிட்டவனே பொருள், செயல் இன்றி மானசீக பூசைக்கு உரிமையுடையவன். இல்லாவிட்டால் மானசீக பாவனை மட்டுமே மிகவும் துல்லியமாக இருக்கும்; மனதில் அதன் நெருக்கம் இருக்காது. நீங்கள் உங்களுக்காக பொருட்களை விரும்பிச்சேர்க்கிறீர்கள். வேலையே மற்றவர் மூலம் செய்ய விரும்புகிறீர்கள். உங்களுக்கு விருப்பம் பொருளில், செயலில் இருக்கிறது. இனி அந்த விருப்பு பரமாத்மாவிடம், தேவனிடம், குருவிடம், சாதுக்களிடம் எந்த மீடியத்தின் மூலம் எழப்போகிறது? உங்களுக்கு விருப்பமான பொருட்கள், சரீரத்துக்கு சேவை தருமானால், விருப்பு அங்கு செல்லும், கற்பனையால் மட்டுமே செல்லாது.

இதுவே பூசையின் ரகசியம். இதை அறியாமல் பூசையை இகழ்பவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். இதை அறியாமல் மூட பூசை செய்பவர்கள் கண்டனத்துக்கு உறியவர்கள்.