Wednesday, November 21, 2007

யார் பிராமணன்?

பாண்டவர்கள் வனவாசம் செய்துகொண்டிருந்த சமயம். ஒருநாள் பீமசேனன் வனத்தின் அழகை ரசித்துக்கொண்டு உலாவிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெரிய மலைப்பாம்பு அவனை பிடித்து சுற்றிக்கொண்டது. அசாத்தியமான பலம் கொண்ட பீமனால் எத்தனை முயற்சித்தும் அந்த பாம்பிடமிருந்து மீள முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில், யுதிஷ்டிரர் தமயனை தேடி அங்கு வந்தார். பீமனின் நிலையை பார்த்து பயந்துபோனார். பாம்பிடம் பீமனை விட்டுவிடும்படி பிரார்த்தித்தார். வேறு ஏதாவது இறை கொடுத்துவிடுகிறேன் என்றார். ஆனால், அந்த சர்ப்பம் அதற்கு இணங்கவில்லை.

ஆச்சரியமாக, அந்த பாம்பு பேச ஆரம்பித்தது.

அந்த பாம்பு வேறு யாருமல்ல, பாண்டவர்களின் மூதாதயர். பூர்வீக பிறவிகளில் அந்த பாம்பு நஹூஷன் என்ற அரசன். பணமும், அதிகாரமும் சேர்ந்த செருக்கால் அந்த அரசன் பிராமணர்களை அவமதிக்கவே அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாக பிறந்திருந்தான்.
அந்த பாம்பு யுதிஷ்டிரரிடம் சில கேள்விகளுக்கு சரியான விடை சொன்னால் பீமனை விட்டுவிடுவதாக சொன்னது.

நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் வருமாறு..

ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?

யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.

ந : இந்த குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவன் பிராமணனா? பிரம்மம் என்பது சுகதுக்கங்கள் இல்லாதது என்றால், சுகதுக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே!

யு : சத்தியம் முதலான நான் சொன்ன குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால் அவன் சூத்திரன் அல்லன். இந்த குணங்கள் ஒரு பிராமணரிடம் இல்லையென்றால் அவன் பிராமணன் அல்லன். ஓ, சர்ப்பமே, இந்த குணங்கள் கொண்டிருக்கும் மனிதன் பிராமணன் என்றே ஆகிறான். இக்குணங்கள் இல்லாமல் இருப்பவன் சூத்திரனே.

சுகதுக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் உஷ்ணமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுகதுக்கங்கள் இல்லை.

ந : குணங்களே பிராமணனை தீர்மானிக்குமானால், இக்குணங்கள் இல்லா பிராமணின் பிறப்பு முக்கியமற்று போகிறதே.

யு : பல குணங்கள் கலந்துவிட்ட இக்காலத்தில் பிறப்பால் பிராமணனை காண்பது கஷ்டம். எல்லாரும் பிறப்பில் சூத்திரர்களே. சில சம்ஸ்காரங்களாலும், வேதம் படிப்பதாலும் பிராமண குணங்கள் கிடைத்து பிராமணனாகிறான். ஸ்வாயம்புவ மனு சொல்வதும் இப்படியே. எல்லா சம்ஸ்காரங்களும் செய்தும், வேதம் படித்தும் அவனுக்கு இக்குணங்கள் கொள்ளாவிட்டால் அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்துகொள். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இது. தன் சம்ஸ்காரங்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவனே பிராமணன்.

யுதிஷ்டிரனின் இந்த பதில்களால் சந்தோஷப்பட்ட நகுஷன் பீமசேனனை விடுவிக்கிறான்.

- மகாபாரத இதிஹாஸம். தத்வலோகா பத்திரிக்கையில் 1993 ஜனவரியில் பிரசுரமானதின் மறுமீட்பு இங்கே.

Friday, October 12, 2007

ராம ஆஞ்சனேய ஆலிங்கனம்

லங்கையிலிருந்து வெற்றிகரமாக பிராட்டியை தரிசித்து பெருமாளுடைய சந்தேஷத்தை கொடுத்து திரும்பிய ஆஞ்சனேய ஸ்வாமியை பெருமாள் சந்தோஷம் தாங்காமல் ஆலிங்கனம் பண்ணிக்கொண்டார்.

மகான் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரின் பேரனான பிரசித்தமான பக்த கவி நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் ரகுவீரஸ்தவம் என்ற ஸ்தோத்திரத்தில் இதை அத்வைத பரமாக இப்படி அன்வயப்படுத்துகிறார்.

नित्यम् सुशुप्तिषु परिश्वजसे न राम
भूतानि किम् निखिलभूतगुहाषयस्त्वम्।
आसाद्य तत् प्रकटम् अर्थम् अवाप कीर्तिम्
आचन्द्रतारविमलाम् अनिलात्मजन्मा॥ रघुवीरस्तवः

நித்யம் சுசுப்திஷூ பரிச்வஜஸே ந ராம
பூதானி கிம் நிகிலபூதகுஹாஷயஸ்த்வம்
ஆஸாத்ய தத் ப்ரகடமர்த்தமவாப கீர்த்திம்
ஆசந்த்ர தாரவிமலாம் அநிலாத்மஜன்மா

ராம - ஹே ராமா,

நிகிலபூதகுஹாஷயஸ்த்வம் - உலக பூதர்களின் ஹ்ருதய குகையில் வசிக்கும் (சாக்ஷாத் ப்ரம்மனான நீ..)

நித்யம் சுசுப்திஷூ - தினசரி சுசுப்தியில் (ஆழ்ந்த உறக்கத்தில்)

பூதானி - எல்லா உயிர்களையும்

பரிச்வஜஸே ந ராம - அணைப்பதில்லையா ராமா?

தத் அர்த்தம் - அந்த செல்வம் (ஆசிர்வாதம்)

ப்ராக்தம் - திறந்தபடி (அதாவது முழித்திருக்கும்போது)

ஆஸாத்ய - கிடைக்கும்

அநிலாத்மஜன்மா - வாயுபுத்ரனான ஹனுமான்

ஆசந்த்ர தாரவிமலாம் - சந்திர நட்சத்திரங்களுள்ளவரை (அதாவது சிரஞ்சீவியாய்) அப்பழுக்கற்று...

கீர்த்திம் - புகழை

அவாப - அடைந்தார்.

ஒவ்வொரு ஜீவனும் ஆழ்ந்த உறக்கத்தில் பரப்பிரும்மத்துடன் ஐக்கியமாவதாக உபநிஷதங்கள் சொல்கின்றன. ஆனால், அவர்கள் இதை அறியாமல், விழித்தெழும்போது மீண்டும் வாசனை, கர்மா கட்டுண்ட ஜீவர்களாகவே எழுகிறார்கள்.

அப்படி ஒருவன் விழித்திருக்கும்போதே, பிரும்மத்துடன் கலந்தால் - அதாவது தன் பிரும்ம உருவை உணர்ந்தால் - அதுவே மோட்சமாகும்.

பரப்பிரும்மமான ராமன் அனுமனை ஆலிங்கணம் செய்து இந்த உயர்ந்த பதவியை கொடுத்தான். இதுவே ராமாஞ்சநேய ஆலிங்கனத்தின் ரகசியம்.

Saturday, July 28, 2007

சூர்ப்பனகை vs அனுமன்

ராமாயண ரகசியம் என்று நான் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன்.

அதன் தொடர்பாக ராமாயண விஷயமாக பல பதிவுகள் இறைவன் அருளால் யதேச்சையாக கிடைக்கப்பெட்டது.


எனது அருமை நண்பர் - கோவை திரு. ராஜகோபாலன் சேஷாத்ரி CA அவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட சில ராமாயண ரகசியங்களை இங்கு பதிகிறேன்.


முதலாவது:


எப்போதுமே பெருமாளையும், தாயாரையும் சேர்ந்தே சேவிக்கவேண்டும். தனியாக்கவே கூடாது.



உதாரணம்:



சூர்ப்பனகை: சீதையைய்த்தவிர்த்து ஸ்ரீ ராமன் தான், அவளுக்கு வேண்டியதாயிற்று. சீதாதேவியை விட்டுவிடு என கெஞ்சி, ஸ்ரீ ராமனையே மணக்க விரும்பினாள், வேண்டினாள். பிரித்துவிட நினைத்தாள். முடிவு, மூக்கு, காது போயிற்று.

ராவணன்: ஸ்ரீ ராமனையே எதிர்த்தான்.
முடிவு, ராஜ்யம், பிள்ளைகள், நாடு, சகோதரர்கள், (எதைத்தான் அவன் இழக்கவில்லை.) எல்லாவற்றையுமே இழந்தான். அவனுடைய பத்து தலைகளுமே போயிற்று.


பக்த ஹனுமான்: ஸ்ரீ ராமனையும், சீதாபிராட்டியையுமே மனதில் கொண்டு ஹனுமான் சேர்ந்தே பூஜித்தார்.


பலன்:
1. வால்மீகி அவருக்கென்றே ஒரு முழு காண்டத்தையே ஒதுக்கி அதில் அவர் புகழையே பாடிவைத்தார்.


2. ஸ்ரீ ராமனையே சதா ஸ்மரணை செய்யும் பாக்கியத்தால், சிரஞ்சீவியாக இன்றும் நம்மிடம் வாழ்கிறார், எங்கெங்கு ராமா என நினைத்த மாத்திரத்தில், அங்கு கைகட்டி, வாய்பொத்தி, கண்ணீர் மல்க நமது இருப்பிடம் தேடி வந்து, ஸ்ரீராம பஸ்ரீனையில் ஆழ்ந்து விடுகிறார்.


3. மேலும், ஸ்ரீ ராமனே அவரை கட்டித்தழுவி அவர் தோளில் கண்ணீர் மல்கும் பாக்கியம் அவருக்கே கிடைத்தது.


“ நீ எனக்கு சீதாதேவியின் சூடாமணியை என் கையில் கொடுத்து ‘கண்டேன் சீதையை’ என்று என்னிடம் அவள் செய்தியைத் தந்ததற்கு, என்னால் அதற்கு ஈடாக உனக்கு எதை கொடுப்பேன்?


எனக்காக நூறு யோஜனை சமுத்ரத்தைத் தாண்டி, லங்கைக்கு சென்று, சீதையிடம் என் கணையாழிக்கு பதிலாக அவள் தான் சூட்டிக்கொள்ளும் சூடாமணியை எனக்காக கொண்டு வந்திருக்கிறாய். இது யாராலும் செய்யமுடியாத மிகப்பெரிய கார்யம். உனக்கு இணையாக எவ்வுலகிலும் யாருமே இருக்கமுடியாது. இச்செய்கைக்கு ஈடாகக்கொடுப்பற்கு என்னிடம் ஒன்றுமே இல்லையே. என் செய்கேன், புரியவில்லையே.

ஆம், ஆம், ஓன்றே ஒன்று இருக்கிறது, அதையே உனக்கு த்தந்து விடுகிறேன். அது நானே தான், உனக்கு என்னையே அர்ப்பணித்தேன். என்னையே எடுத்துக்கொள். இனி நான் உனது உடமை. என்னை எடுத்துக் கொள்வாயா?” என ---- ஸ்ரீராமன் தன் பக்தன் ஹனுமானின் தோளில் கண்ணீர் மல்கி, இப்படி நினைத்து ஹனுமானை கெஞ்சி, இருகக்கட்டிக்கொண்டி ருப்பாரோ?


தன்னையே ஹனுமனுக்கு உடமையாக்கிய ஸ்ரீராமன் இப்படியும் நினைத்திருப்பாரோ? இருக்கலாம் அல்லவா!!!

4. சீதம்மா, அவரை வத்ஸ, (குழந்தாய்) என லவகுசருக்கு முன், அவரை அழைத்து, சீதாராமனுக்கே முதல் பிள்ளையாக்கினார். இப்பேர்பட்ட பதவி வேறு யாருக்காவது கிட்டியதா? தெரிந்தால் சொல்லுங்களேன்.


*****ஸ்ரீசீதாராமஜயம்****