Wednesday, April 19, 2006

ராவணனும் தசரதனும்

திரு ம்யூஸ் அவர்கள் தன் ஒரு பதிப்பில் கற்பு என்றொரு விவாத்த்தில் எனக்கு தெரிந்த அபிப்ராயத்தை முன் வைத்தேன். அவர் திடீரென்று கம்ப்ளீட்டாக புதிதாக ஒரு குண்டை போட்டார். அதாவது (அ) ராமணனும் தசரதனும் ஒரே தவறைதான் செய்தார்கள் (ஆ) ராமன் தசரதன் நடத்தைக்கு வெட்கப்பட்டான் என்று.

அவர் பதிப்பும் என் பதிலும் வருமாறு:

ம்யூஸ்:

ராமாயணத்தில் எனக்கு எழும் ஒரு சந்தேகம். ஸ்ரீமான் ஜெயராமன் அவர்களே, நீங்கள் இதற்குப் பதில் சொல்லலாமே.ராவணனுக்கு அவனை விரும்பாத ஒரு பெண்ணைத் தொட்டால் தலை சுக்கு நூறாகிவிடுமென்ற ஒரு சாபம் இருந்தது. அதனாலேயே அவன் சீதையை அசோக வனத்தில் வைத்து நைச்சியம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தான். தொட முடியவில்லை.எம்பெருமான் அவனை அழித்ததற்குக் காரணம் அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதே. ஆனால், பெருமானின் தந்தைக்கோ ராவணன் பெற்ற சாபத்திற்கு நேரெதிரான சாபமிருந்ததாகக் கேள்வி. (சரியா என்று தெரியவில்லை.) அதாவது தசரதன் அடிக்கடி திருமணம் செய்ய வேண்டும் என்பதே அச்சாபம் (சாபமா, அல்லது வரமா? :-) ). ராமனின் தந்தையும் பல பெண்களை மணம் செய்து கொண்டவர்தான். இருவரும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தினாலும், தசரதனை வணங்கும் ராமன் ராவணனை அழிக்கிறான். இதுதான் எனக்குப் புரியவில்லை. விளக்கம் தேவை.தன் தந்தையின் நடத்தையே தனயனை ஒரே ஒரு பெண்ணின் மேல் மட்டும் காதல் பக்தி கொள்ளத் தூண்டியதோ என்றும் தோன்றுகிறது.
April 19, 2006 5:47 AM

என் பதில்:

ம்யூஸ் அவர்களுக்கு,தங்கள் கேள்வி விசித்திரமாய் இருக்கிறது. என்ன அடிப்படையில் கேட்கீறீர்கள் என்பது விளங்கவில்லை.

கேலிக்காகவா, இல்லை நிஜமாகவே இது உங்கள் சந்தேகமா.

தசரதன் வருடத்துக்கு ஒரு தடவை மணம் புரிந்தது அவனுடைய சாய்ஸ். அது ஒரு சாபத்திலிருந்து தன்னை காக்க அவன் எடுத்த உத்தி. அவன் யாருடைய மனைவியையும் கடத்தவில்லை. யாரையும் வலுக்கட்டாயமாக கெடுக்கவில்லை. மிரட்டி அடிபணியவைக்கவில்லை. அடிமைப்படுத்தி சேவகம் புரிய வைக்கவில்லை.

இந்த நான்கையும் ராவணன் செய்தான்.

பல மனைவிகளை ஏற்பது நம் கலாசாரத்துக்கு உட்பட்ட ஒரு செயல். இதில் வெட்கப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. (தங்களைப் போன்ற புரட்சியாளர்கள் தவிர்த்து).

எத்தனையோ குடும்பங்களில் அக்காவே வற்புறுத்தி தன் தங்கையை மாமாவுக்கு மணம் செய்து வைத்ததை நான் அறிவேன். குழந்தைக்காக.


ஏன், தமிழர் காவலர்களாக தங்களை கூறிக்கொள்ளும் மூத்த தலைவர்களும் இரண்டு மனைவி வைத்துக்கொண்டு பெருமையாக சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்களே!

(இரண்டாவது கல்யாணம் சட்ட விரோதம். இவர்கள் சட்டத்தை மீறியவர்கள்தான். ஆனால், முதல் மனைவியின் புகார் இல்லாமல் கைது செய்ய முடியாது என்ற அற்ப விஷயத்திற்காக இவர்கள் தோளில் துண்டு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.)

தசரதன் பெண்மையை மதித்தவன். தன் மனைவி மார்களை கலந்து ஆலோசிக்காமல் அவன் எந்த முடிவும் எடுக்க மாட்டான். மனைவி கைகேயியுடன் போருக்கு செல்லும் அளவுக்கு அவன் மனைவி மார்களுக்கு சம உரிமை வழங்கியிருந்தான்.

அவன் எங்கே! ராவணன் எங்கே.

ராவணன் பார்க்கும் பெண்களை உடனே பெண்டாள நினைப்பவன். தன் அண்ணன் குபேரன் மனைவியையே கற்பழிக்க முயற்சி செய்து சாபம் வாங்கியவன். தேவ லோகத்து பெண்களை தகாது நடந்து சாபம் வாங்கினவன்.

தன் சுய லாபத்திற்காக நாட்டையே பணயம் வைத்தான். மனைவி, தம்பிகள் சொல்லியும் கேட்காமல் தேவிக்காக இலங்கையே அழித்தான். ஆனால், தசரதன் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற அநியாய கைகேயின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டவன்.

இவர்களை ஒரே தராசில் நீங்கள் காட்டுவது என்ன வருத்தமான விஷயம்!

தசரதன் நடவடிக்கைகளில் வருந்தி ராமன் ஏகபத்தினி விரதம் ஏற்றான் என்பது மிகவும் அடாதது.

ராமாயணத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் ராமன் தசரதன் புகழ் பேசுகிறான். ராமனை நீ யார் என்று யாராவது கேட்டால் போதும், தசரதாட்மஜம் என்று தசரதனின் பையன் என்றுதான் சொல்லிக்கொள்வான்.

காட்டில் பரதனை பார்த்த வுடன் ராமன் கேட்கும் முதல் கேள்வியே நன் பெருமைக்குரிய அப்பா எப்படி என்றுதான். தேவியை காட்டுக்கு வராதே என்று ராமன் கெஞ்சும்போதும் என் அப்பாவுக்கு நீ சேவை செய் என்றுதான் கேட்கிறான்.

ஜடாயுவை கட்டிக்கொண்டு அழும் காரணமே அவர் தசரதனின் நண்பன் என்றுதான். என் அப்பாவையே தங்களிடம் பார்க்கிறேன் என்கிறான்.

இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.தங்கள் பதிப்புகளில் வீச்சு இருக்கும் அளவிற்கு ஆழமும், உண்மையும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது.


.கு: தசரதனின் சாபம்: ச்ரவணின் மரணத்தால் அவன் சாக வேண்டும் என்பது. ஆனால், exception ஆக, சாஸ்திரப்படி கல்யாணம் ஆகி ஒரு வருடம் விரதம் முடியாத்தால் விலக்கு. அதனால், வருடா வருடம் புது மணம் செய்து புது மாப்பிள்ளை exemption வாங்கிக் கொண்டார் இவர்.
April 19, 2006 10:58 AM

2 comments:

அசுரன் said...

ராமன் சாம்பூகனை ஏன் கொன்றான்?

எனக்கு இது சுத்தமாக விளங்கவில்லை.

குமரன் (Kumaran) said...

ஜயராமன் அவர்களே. தசரதன் அடுத்தடுத்துத் திருமணம் செய்து கொண்டதற்கு இன்னொரு காரணம் உண்டென்று படித்திருக்கிறேன். பரசுராமன் க்ஷத்திரியர்களை அழித்துக் கொண்டு வரும் போது எந்த க்ஷத்திரியனோ திருமண மேடையில் இருந்தால் அவனை அழிக்காமல் திரும்பி விடுவாராம். அதனால் அயோத்தியின் எல்லையில் பரசுராமர் வருகிறார் என்ற செய்தியை அறிந்தவுடன் தசரதன் திருமணம் செய்து கொள்வார் என்று படித்திருக்கிறேன். இது வால்மீகியோ கம்பரோ துளசிதாசரோ யார் சொன்னது என்று தெரியவில்லை; இவர்கள் யாருமே சொல்லாததாய் கூட இருக்கலாம்.