Wednesday, October 25, 2006

மீன்களிலும் தாழ்ந்தவன் - வைராக்ய சதகம்

இதுவரை பார்த்தது

16ஆவது ஸ்லோகம் காமத்தின் வீழ்ச்சி

17வது ஸ்லோகம் சிவனின் தனித்துவம்

கவி மேலும் தொடர்கிறார்.

அஜானந்தாஹாத்ம்யம் பதது சலபஸ்தீவ்ரதஹனே
ஸ மீனோऽப்யஞானாத்வடிசயுதமச்னாது பிசிதம்
விஜானந்தோऽப்யேதே வயமிஹ விபஜ்ஜாலஜடிலான்
ந முஞ்சாம: காமானஹஹ கஹனோ மோஹமஹிமா 18


अजानन्दाहात्म्यं पततु शलभस्तीव्रदहने
स मीनोऽप्यज्ञानाद्वडिशयुतमश्नातु पिशितम्‌।
विजानन्तोऽप्येते वयमिह विपज्जालजटिलान्
न मुञ्चामः कामानहह गहनो मोहमहिमा॥ १८॥


ajaanandaahaatmyaM patatu shalabhastiivradahane
sa miino.apyaGYaanaadvaDishayutamashnaatu pishitam.h .
vijaananto.apyete vayamiha vipajjaalajaTilaan
na muJNchaamaH kaamaanahaha gahano mohamahimaa 18

A moth falls in fire not knowing its burning power; the fish
gets caught for food in baited hook in ignorance; and here we, despite aware of complex dangers of sensual pleasures, do not renounce them. Oh! how profound is the power of delusion! 18

தீவிரமாக தகிக்குமென்றறியாமல் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகள்; (ஆபத்தென்று) அறியாமல் தூண்டிலின் இறையை கவ்வி மாட்டும் மீன்கள்; காமசுகங்களின் ஆழமான ஆபத்துகளை அறிந்தும் இங்கே விட இயலாமலுள்ள நாம்; மோகங்களின் மகிமை எத்தனை கடுமையானது. 18


================
விளக்கவுரை:
அனைத்து உயிரனங்களும் புலனின்பத்தில் அழிகின்றன. உணவாசை, உடலாசை என்று வாழ்க்கையை தொலைக்கும் மீன்களும், விட்டில்களும் ஒரு விதத்தில் மனிதனைவிட மேலானவை. ஏனெனில், அவை, அறியாமல் உள்ளுணர்வில் வாழ்கின்றன.

ஆனால், பகுத்தறிவுள்ள ஒரே ஜீவனான மனிதன் மற்ற உயிரினங்களைவிட தாழ்கிறான். காரணம் - அவன் அறிந்தே தவறிழைத்து மாள்கிறான்.

பகுத்தறிவு பெற்றதாலேயே, மானிட ஜன்மம் கர்ம வினைகளுக்கு காரணமாகிறது. மற்ற பிறப்புகள் கர்மவினைகளை அனுபவிக்கவே படைக்கப்பட்டன.

ஆனால், மனிதர்களில், அறியாமல் கெட்டவர்களைவிட அறிந்து கெட்ட மனிதர்களே மிகுதி. இராவணன், துரியோதனன் முதலானோர் இதற்கு எடுத்துக்காட்டு. இகவாழ்க்கையிலும் உடலுக்கும், வாழ்க்கைக்கும் ஊறு என்று அறிந்தே மக்கள் அல்ப சுகங்களுக்காக பெரும் பலன்களை இழக்கிறார்கள். குடிக்கு கேடு என்று அறிவித்துக்கொண்டே கோடிகளாய் குடிகள் விற்கின்றன.

அறிதான மானிடப்பிறப்பில், இந்த உடலை பலனாக்கி உய்வோர் மிகச்சிலரே. அறிவினாலும் வெல்ல இயலாத இப்புலனின்பங்கள் எத்துனை சக்தி வாய்ந்தவை என்று வியக்கிறார் கவி.

9 comments:

Floraipuyal said...

கவி என்று சொல்கிறீர்களே. தமிழில் உள்ளது போல் இவற்றுக்கும் ஏதாவது இலக்கணம் உண்டா? அப்படி உண்டாயின் அது பற்றி விளக்க முடியுமா? தமிழில் உள்ளது போல் சுவையாகச் செங்கதத்தில் எழுத முடியுமா?

படிப்பதற்கு வெறும் வசனம் போல் தோன்றுவதால் இக்கேள்வி.

ஜயராமன் said...

floraipuyal அவர்களே,

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

///கவி என்று சொல்கிறீர்களே. தமிழில் உள்ளது போல் இவற்றுக்கும் ஏதாவது இலக்கணம் உண்டா? அப்படி உண்டாயின் அது பற்றி விளக்க முடியுமா? ////

நிச்சயமாக உண்டு. தமிழைப்போலவே சிறப்பாக பாட்டிலிணக்கம் வடமொழியில் உண்டு. குறள் போல இருவரிக்கவிதைகளும், நான்குவரி செய்யுள்களும், வேறு பல சந்தத்தில் அமைந்த பாட்டுகளும் வெகுவாக இலக்கணத்தில் உள்ளன. எதுகை, மோனை போன்ற பல அணிகளும் வடமொழியில் இருக்கின்றன. சிலேடைப்பாடல்களும் உள்ளன.

வடமொழியில் செய்யுள்களில் வார்த்தைகள் எந்த வரிசையில் வேணுமானாலும் வரலாம் என்று ஒரு சுதந்திரம் இருப்பதால் பாடல்கள் இன்னும் சுதந்திரமாக, மெருகோடு இயற்ற முடியும்.

///தமிழில் உள்ளது போல் சுவையாகச் செங்கதத்தில் எழுத முடியுமா?///

நிச்சயமாக. ராமாயணம் முதல் பல வடமொழி இலக்கியங்களில் இலக்கிய சுவை மிகுந்து இருப்பதாக பல மேநாட்டு அறிஞர்களும் ஒப்புகிறார்கள்.

இவை வெறும் வசனம்போல் தோன்றுவதில்லை. அழகாக இவற்றை பாடும் ஒரு சந்தத்தில் அமைந்தவையே.

நன்றி

Floraipuyal said...

பதிலிற்கு நன்றி. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைகின்றேன். நேரம் கிடைக்கும் பொழுது இது பற்றித் தனிப்பதிவு இடுங்களேன். அப்படியே ஏதேனும் சுட்டிகள் இருந்தால் தரவும்.
நன்றி.

கோவி.கண்ணன் [GK] said...

//ஆனால், பகுத்தறிவுள்ள ஒரே ஜீவனான மனிதன் மற்ற உயிரினங்களைவிட தாழ்கிறான். காரணம் - அவன் அறிந்தே தவறிழைத்து மாள்கிறான்.
//

ஜெயராமன் சார் !
நீங்களும் *பகுத்தறிவு* பேச ஆரம்பிச்சிட்டிங்களே !
:)

கர்ம வீனைகள் சேருவதும், தீருவதும் உடல் வழியே தானே நடக்கிறது. உடல் இல்லையென்றால் வீடுபேறு அடையவே முடியாதே ! எந்த காரணத்துக்காக முதல் பிறவி எடுத்தோம் என்பதை ஜீவன் அறிந்து கொள்ள பல பிறவிகள் எடுத்தே ஆகவேண்டும் என்பது விதி !

ஒவ்வொரு ஜீவனுமே எதாவது ஒரு பிறவியில் இதை உணர்ந்து முக்தி அடைந்தே தீரும் !

ஜயராமன் said...

கண்ணன் சார்,

வருகைக்கு நன்றி.

///ஜெயராமன் சார் !
நீங்களும் *பகுத்தறிவு* பேச ஆரம்பிச்சிட்டிங்களே !
:)///

கலியுக கண்ணன் கலகத்தை ஆரம்பிக்க வேண்டுமா???

பகுத்தறிவு என்பது ஒரு தகாத வார்த்தையா? தான் காணாததை கண்டுபிடித்து அதை தீர ஆராய்ந்து முடிவு எடுப்பதே பகுத்தறிவு இல்லையா. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கவே பகுத்தறிவு என்று சிலர் கருதுவதால் அது அவர்களுக்குத்தான் இழுக்கு.

நன்றி

கோவி.கண்ணன் [GK] said...

//கலியுக கண்ணன் கலகத்தை ஆரம்பிக்க வேண்டுமா??? //

ஜெயராமன் சார்...!
கர்மவினைப் பற்றி நான் சொன்னது மட்டும் ஏன் உங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை ?

:))

ஜயராமன் said...

கண்ணன் ஐயா,

/////கர்ம வீனைகள் சேருவதும், தீருவதும் உடல் வழியே தானே நடக்கிறது. உடல் இல்லையென்றால் வீடுபேறு அடையவே முடியாதே ! எந்த காரணத்துக்காக முதல் பிறவி எடுத்தோம் என்பதை ஜீவன் அறிந்து கொள்ள பல பிறவிகள் எடுத்தே ஆகவேண்டும் என்பது விதி !////

////ஜெயராமன் சார்...!
கர்மவினைப் பற்றி நான் சொன்னது மட்டும் ஏன் உங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை ?////

மன்னிக்கவும். தங்கள் மேற்சொன்ன வரிகள் என்னை ஈர்த்தன. அவை முற்றிலும் உண்மையானதால், நான் அதில் மேலே எதுவும் பேச முடியவில்லை. தங்களின் கருத்து எனக்கு உடன்பட்டதே. அதற்கு மிக்க நன்றி

bala said...

//கர்ம வீனைகள் சேருவதும், தீருவதும் உடல் வழியே தானே நடக்கிறது. உடல் இல்லையென்றால் வீடுபேறு அடையவே முடியாதே ! எந்த காரணத்துக்காக முதல் பிறவி எடுத்தோம் என்பதை ஜீவன் அறிந்து கொள்ள பல பிறவிகள் எடுத்தே ஆகவேண்டும் என்பது விதி !

ஒவ்வொரு ஜீவனுமே எதாவது ஒரு பிறவியில் இதை உணர்ந்து//

ஜி கே அய்யா & ஜயராமன் அய்யா,

நம்ம திருவள்ளுவர் சொன்ன,
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு"
என்பது மேலே சொன்ன தியரிக்கு மாற்று தியரியா? கொஞ்சம் விளக்கமா சொல்ல வேண்டுகிறேன்.

பாலா

ஜயராமன் said...

பாலா,

///
என்பது மேலே சொன்ன தியரிக்கு மாற்று தியரியா? கொஞ்சம் விளக்கமா சொல்ல வேண்டுகிறேன்.///

கேள்விக்கு நன்றி.

தற்போது அலுவலத்தில் இருப்பதால் மாலை இதற்கு பதிலெழுத முயலுகிறேன்.

நன்றி